தாக்குதலுக்குள்ளான வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி  பலி!

Tuesday, May 31st, 2016

காரைநகர் சிவன்கோவில் பகுதியில் கடந்த-15 ஆம் திகதி தன் பேரனால் தாக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிபப்  பெண்மணி நேற்று (30-05-2016) சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சுப்பிரமணியம் சீதாலட்சுமி(வயது-73) என்ற வயோதிபப் பெண்மணியொருவர் தன் மகள் மற்றும் மகளின் இருபிள்ளைகள், மனைவியைப்  பிரிந்த மகன் ஆகியோருடன் வாழ்ந்து வந்த நிலையில் குறித்த வயோதிபப்  பெண்மணியின் மகளுடைய மகன் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கின்றார்.

27 வயதான  மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் தினசரி வீட்டின்கதவை பூட்டி திறப்பைக்  கையில் வைத்துக் கொண்டு தன்னுடைய அனுமதி இல்லாமல்யாரும் வீட்டுக்குள் போகக் கூடாது என வீட்டில் இருந்தவர்களை வற்புறுத்துவதைவழக்கமாக கொண்டிருந்துள்ளான்.

இந்நிலையில் கடந்த-15ஆம்  திகதி குறித்த இளைஞனின் தாய் கூலி வேலைக்குச்  சென்றுவிட்டு மழை காரணமாக வீடு திரும்பாத நிலையில் குறித்த  வயோதிபப் பெண்மணி  தன் பேரனை சோறு சாப்பிடுமாறு கேட்டிருக்கின்றார்.

இதற்குப்  பேரன் மறுத்த நிலையில் இல்லை கட்டாயம் சாப்பிடவேண்டும் என கேட்டவாறு குறித்த பெண்மணி  குசினிக்குள் சென்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன்(பேரன்) தனது அம்மம்மாவை மர சட்டத்தால் தாக்கி விட்டு வீட்டின் தாள்வாரத்தில் கொண்டுவந்து போட்டுள்ளான்.

இந்தச் சம்பவத்தின் போது குறித்த வயோதிபப் பெண்மணி உரக்கச் சத்தமிட்ட போதும் அயலவர்களோ, வீட்டில் இருந்தவர்களோ காப்பாற்ற  வராத நிலையில் மறுநாள்-16ஆம்  திகதி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனின் தாய் வந்து தனது தாயைக் காப்பாற்ற முயன்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார். இந்த நிலையில் அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதையடுத்துச் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts: