தமிழ் மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம் !- டக்ளஸ் தேவானந்தா

Saturday, April 2nd, 2016

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் தற்கொலை அங்கியும், வெடி பொருட்களும்  கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வந்தது. அந்தச் செய்தியை வாசிக்கும்போதே அது பற்றிய பல்வேறு எண்ணங்கள் எழுகின்றன. அதை யார் செய்திருந்தாலும், யார்? பின்னணியில் இருந்திருந்தாலும் தமிழ் மக்களாகிய நாம் கடந்த கால வரலாற்றில் இருந்து கொண்டே விடயங்களை ஆராய வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் அந்த பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது –

இவ்வாறான சம்பவங்கள் ஏதோ ஒருவகையில் தமிழ் மக்களின் தற்போதைய சுமூகமான வாழ்வுக்கும், இருப்புக்கும் குந்தகத்தை அல்லது குழப்பத்தை விளைவிக்கும் தீய நோக்கத்துடன் நிகழ்த்தப்படுவதாகவே நான் கருதுகின்றேன்.

எனவே தமிழ் மக்கள் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் எப்போதும் விழிப்பாக இருக்கவேண்டும் என்பதுடன் நாம் விழிப்பாக இருப்பதன் மூலமாகத்தான் இன்று ஏற்பட்டுள்ள அமைதியையும், சமாதானத்தையும், கௌரவத்தையும் நாம் பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்லமுடியும்.

கடந்த கால வரலாற்று பாடங்களில் இருந்து நாம் நிறையவே கற்றுக் கொண்டிருக்கின்றோம். அந்தப் பாடங்களையும், அனுபவங்களையும், நாம் முன்னோக்கி நகர்வதற்கான திசைகாட்டியாகவே கொண்டிருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

Related posts: