தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்படுவோருக்கெதிரான சட்டநடவடிக்கைகள் ஆரம்பம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, November 13th, 2020

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து, சட்டத்தை மீறுவோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் இதற்காக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

கொழும்பு வடக்கு, மத்திய கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதியுயர் தொழில்நுட்பம் கொண்ட ட்றோன் கமராக்கள் என் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி, அந்த பகுதியில் உள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய செயற்படுகின்றார்களா? என்பது குறித்து நேற்று முதல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி நேற்று கொழும்பு முகத்துவாரம்; பகுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்ட 15 பேர் ஆளில்லா விமானத்தின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறி ஏனைய பகுதிகளுக்கு செல்வோர் கட்டாயமாக 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சுய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை, சுகாதார தரப்பினருடன் இணைந்து பொலிஸாரும் கண்காணிப்பதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதுவரையில் 29 ஆயிரத்து 206 குடும்பங்களைச் சேர்ந்த, சுமார் 80 ஆயிரம் பேர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.அவர்கள், பொலிஸார் , சுகாதாரத் துறையினர் மற்றும் இராணுவ உத்தியோகத்தர்களினால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றனர்.

மேலும் தனிமைப்படுத்தல் தொடர்பான அறிவித்தல் ஒன்று உங்களது வீட்டில் காட்சிப்படுத்தப்பட்டிருக்குமாயின், நீங்கள் கட்டாயமாக வீட்டிலேயே இருக்க வேண்டும். நீங்கள் வீட்டில் இருந்து வெளியேறுவதும், வேறு தரப்பினர் உங்களது வீட்டுக்கு வருவதும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் குற்றமாகும்.

அவ்வாறான நபர்களுக்கு எதிராகவும், அந்த சொத்துக்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: