ஜனாதிபதியிடம் தெரிவிக்க இதுவரை 44,677 முறைப்பாடுகள்!

Wednesday, March 9th, 2016
 “ஜனாதிபதியிடம் தெரிவிக்க…” என்ற நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தமாக 44,677 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளர் சிரால் லக்திலக்க தெரிவித்தார்.

“ஜனாதிபதியிடம் தெரிவிக்க…” நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர்கள் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று(08) நடைபெற்றது.

நல்லாட்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் வருட நிறைவினை முன்னிட்டு பொதுமக்களின் நன்மை கருதி 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இந் நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தற்போது இரண்டு மாதங்கள் மட்டும் கடந்த நிலையில் சுமார் 44,677 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், தொலைபேசியினூடாக 22,947 முறைப்பாடுகளும், தபால் மூலமாக 11,636 முறைப்பாடுகளும், இணையத்தளங்களூடாக 10,094 முறைப்பாடுகளும், கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற பிரச்சினைகளில் 8,092 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. முறைப்பாடுகளில் 1,062 முறைப்பாடுகள் இதுவரையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. தற்போது 14,976 முறைப்பாடுகளுக்கான தீர்வுகளுக்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இன்னும் 19,624 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட வேண்டிய நிலையிலுள்ளன. அதை விடவும் சுமார் 923 முறைப்பாடுகள் தீர்வு காண முடியாத நிலையிலுள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.

ஆயினும் இவற்றுக்கு தேவையான விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றுக்கும் விரைவில் தீர்வு காணப்படுமென அவர் மேலும் தெரிவித்தார். இந்த சேவையினைப் பெறுவதற்கு 1919 என்ற இலக்கத்தினை எந்தவொரு நிலையான மற்றும் கையடக்க தொலைபேசிகளூடாகவும் அழுத்தி இலக்கம் இரண்டை அழுத்துவதனூடாக இந்த சேவையினை பெற்றுக் கொள்ளலாம். அதேவேளை சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இச்சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும்.

மேலும் தபால் பெட்டி இலக்கம் 123 என்ற முகவரிக்கு கடிதத்தினை அனுப்பி வைப்பதன் மூலமும் சேவையினை பெற்றுக் கொள்ளலாம். “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” என்ற மென்பொருளொன்றினை இணையத்தில் தரவிறக்கம் செய்து கொள்வதன் மூலமும், இது தவிர வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை மக்களும் இணையத்தின் ஊடாகவும் இந்தச் சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியும். http://tell.president.gov.lk/ என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்து தங்களுடைய குறைகள் மற்றும் யோசனைகளை ஜனாதிபதிக்கு தெரிவிக்க முடியும்.

அத்துடன் tell@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமும் சேவையினைப் பெறலாம். இதைவிடவும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்திற்கு விஜயம் செய்து குறுந்தகவல் அனுப்புவதன் மூலமும் நாட்டிலுள்ள மக்கள் மட்டுமன்றி அனைவரும் இச் சேவையினை பெற்றுக் கொள்ள முடியும்.

தனிப்பட்ட பிரச்சினைகள், பொதுப் பிரச்சினைகள், கிராமிய பிரச்சினைகள், சுகாதார பிரச்சினைகள், கல்வி பிரச்சினைகள், சுற்றாடல் பிரச்சினைகள், பொருளாதார பிரச்சினைகள், ஊழல் ஒழுங்கின்மை தொடர்பான முறைப்பாடுகள், கொள்கை விடயங்கள், என்பன தொடர்பில் தெரிவிக்க முடியும். அது மட்டுமன்றி புதிய வேண்டுகோள்கள், பரிந்துரைகள் தொடர்பிலும் தமது கருத்துக்களை தெரிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலக அதிகாரிகள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் எனப்பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts: