சுமந்திரனைக் கொல்லும் முயற்சி புனர்வாழ்வு பெற்ற போராளிகள் சம்பந்தப்பட்டிருக்கமாட்டார்கள் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உறுதி!

Monday, January 30th, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்யும் முயற்சியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்புப்பட்டிருப்பர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்வதற்கு முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் நால்வர் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியானமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது எனப் பாதுகாப்புத் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த காலத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் நால்வரே இவ்வாறு திட்டம் தீட்டியிருந்தனர் எனவும் இம்மாதம் 13ஆம், 20ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் இவர்கள் சுமத்திரனைக் கொலை செய்ய முற்பட்டு அது சாத்தியப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பளிப்பது எமது அமைச்சின் பொறுப்பல்ல. அதனால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது எனும் போது அது தொடர்பில் பொலிஸார் தான் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும். இவ்வாறிருக்கின்ற போது பாதுகாப்புத் தலமையகத்தின் தரவுகளின் பிரகாரம் யுத்தம் முடிவுற்று  6 வருடங்களுக்கு மேலாகியும் புனர்வாழ்வளிக்கப்படாமல் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் 4000பேர் உள்ளனர். அவர்களால்தான் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுக்கின்றனர் என்று கூறப்படுகின்றது.

ஆனால் அது உண்மைக்குப் புறம்பான விடயம் அவ்வாறு வெளியாகும் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. புர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் தொடர்புப்படவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என பாதுகாப்புத் தலைமையகத்துக்கு தற்போது வரையில் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புத் தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.

9606

Related posts: