சிறுவர் இல்லப் பிரச்சினைகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும்!

Thursday, October 12th, 2017

வடக்குமாகாண சிறுவர் இல்லங்களில் நடைபெறும் பிரச்சினைகள் தொடர்பாக உடனடியாக சிறுவர் பராமரிப்பு நன்னடத்தை திணைக்களத்திற்கு அறியத்தர வேண்டும். காலம் தாழ்த்துகின்ற போது பிரச்சினைகள் பெரிதாகும் என்று சிறுவர் பராமரிப்பு நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் தி.விஸ்வரூபன் தெரிவித்துள்ளார்.

சிறுவர் இல்லங்களில் சிறியளவில் தோன்றும் பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றைச் சுமுகமான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும். சிறிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் காலப் போக்கில் அது வன்முறையாக மாறுகின்றன. அவ்வாறு வன்முறைகள் உருவாகும் போது அவை பொலிஸ் முறைப்பாடாக மாறுகின்றன. அதன் பின்னர் அது நீதி மன்றம் வரை செல்கின்றன.

இந்த நிலைமையினால் பிள்ளைகளின் வாழ்க்கை முறை பாதிப்படைகின்றது. சிறுவர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையே ஏற்படும் சிறிய பிரச்சினைகளை இனம் கண்டு தீர்ப்பது முறையாகும். இது தவிர பிரச்சினைகள் வன்முறையாக மாறும் போது பொலிஸ் முறைப்பாட்டைப் பதிவு செய்ய வேண்டும்.

அதே வேளை மாவட்டச் சிறுவர் திணைக்கள நன்னடத்தைத் திணைக்களத்துக்கும் அறியத் தரவேண்டும். காலம் தாமதிக்காமல் இதனை உரியவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது பொலிஸ் மற்றும் நீதிமன்றம் வரை செல்லும் நிலை ஏற்படும் – என்றார்.

Related posts: