சிறாரின் பாதுகாப்பை உறுதி செய்வது அனைவரதும் பொறுப்பாகும் – யாழ்.மாவட்டச் செயலாளர்!

Tuesday, November 1st, 2016

பாடசாலைச் சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அனைவரதும் பொறுப்பாகும். வாகன சாரதிகளும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு யாழ்.மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கான ஸ்டிகர் வழங்கும் நிகழ்வு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது:

அண்மையில் சிறுவர் மீது மேற்கொள்ளப்பட்ட சில துன்புறுத்தல்கள் சம்பவங்களை மையமாக வைத்து சிறார்கள் பாதுகாப்பாக செல்லவேண்டும், எந்த விதத்திலும் அவர்கள் துன்புறுத்தப்படக்கூடாது என்ற அடிப்படையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விதிமுறைகளுக்கு அமைய நாம் கடந்த வருடத்திலிருந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் தற்போது கைகூடியிருக்கின்றன. பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களைச் சீராக கையாள வேண்டும் என்ற அடிப்படையில் பொலிஸ் திணைக்களமும் நாமும் ஒன்றினைந்து இந்தத் திட்டத்தை மேற்கொண்டுள்ளோம். வாகன ஓட்டுனர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். சமூகத்தில் ஒருசிலர் விடுகின்ற தவறுகளுக்காக நாம் எல்லோரையும் குறை கூறமுடியாது. அனைவரும் ஒன்றினைந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அண்மைக்காலமாக வீதி விபத்துக்களால் அதிகளவான உயிரிழப்புகள் நிகழ்கின்றன. பாடசாலைச் சேவைகளில் ஈடுபடுகின்ற வாகனங்கள் சீராக இருக்க வேண்டியது மிக முக்கியம். குறித்த வாகனங்கள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இந்த நடைமுறை, குறித்த வாகன சாரதிகளுக்கு ஓர் அங்கீகாரம் என்றுதான் சொல்ல வேண்டும். அனைத்தும் ஒழுங்காக இருக்குமிடத்து சாரதிகள் எந்தவித தடையுமின்றிப் பாடசாலைச் சிறுவர்களுக்கான சேவைகளைச் சிறப்பாக வழங்க முடியும். பொலிஸார் உங்கள் வாகனங்களைச் சோதனை செய்யும்போது கூட குறித்த ஸ்டிகர் ஒட்டப்பட்டிருக்கும் போது அது உங்கள் வாகனத்திற்கு ஓர் அங்கீகாரத்தை வழங்குகின்ற நிலைமை காணப்படும் – என்றார்.

நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியகட்சர் ஸ்ரெனிஸ்லால் தெரிவித்ததாவது:

மாணவர்களையும், மாணவிகளையும் நீங்கள் பாடசாலைக்கு ஏற்றிச்செல்லும் போது முதலில் உங்களுடைய வாகனம் சீராக இருக்கின்றதா என்பதை ஆராய வேண்டும். அவர்களின் பாதுகாப்பு முழுக்க உங்கள் கையில்தான் உள்ளது. பாடசாலை மாணவ மாணவிகள் பாடசாலை சென்று திரும்பி வரும்வரை அவர்களின் பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பு. உங்களை நம்பி உங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர். அவர்களின் நம்பிக்கையை காப்பது உங்களது கடமையாகும். மாணவர்களை ஏற்றிச் செல்கின்ற அனைத்து வாகனங்களிலும் குறித்த ஸ்டிகர் இருப்பது கட்டாயம். குறித்த ஸ்டிகர் இல்லாத பட்சத்தில் அது குற்றமாக கருதக்கூடிய நிலைமையும் உண்டு – என்றார்.

vedanayagan-400-seithy

Related posts: