சாலைகளில் இரு முக்கோணம் இணைந்த தோற்றம் வாகனத்தை மெதுவாக செலுத்துவதற்கே!

Sunday, March 4th, 2018

சாலைகளின் நடுவில் வரையப்பட்டுள்ள இரண்டு முக்கோணம் இணைந்த தோற்றம் உடைய அடையாளங்களில் சாரதிகள் வாகனங்களின் வேகத்தைக் குறைத்து அருகில் உள்ள பாதசாரி கடவையில் சாலையை கடப்பவர்கள் இலகுவாக பாதையை கடப்பதற்கு வழிவகைகள் செய்ய வேண்டும் என்று மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

வடக்கு மாகாணத்தில் தற்போது பாதசாரி கடவைகள் மற்றும் சாலை சமிக்ஞை குறியீடுகள் என்பன வெள்ளை நிறத்தால் போடப்பட்டு வருகின்றன. அத்துடன் அழிவடைந்த கோடுகளுக்கும் தற்போது வர்ணம் பூசப்பட்டு வருகின்றது. பாதசாரி கடவையில் இருந்து ஐம்பது மீற்றர் தூரத்தில் வாகனங்களை மெதுவாக செலுத்துவது அவசியம். வாகனங்களின் வேகத்தைக் குறைத்து பாதசாரி கடவைகளின் ஊடாக பாதையை கடப்பதற்கு சாரதிகள் வழிவகைகள் செய்யவேண்டும்.

அதற்கு ஏற்ற வகையில் ஐம்பது மீற்றர் தொலைவில் முன்னால் பாதசாரி கடவை உள்ளது என்பதை காட்டும் நீல நிறத்திலான பதாகை சாலை அருகே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அந்தப் பதாகை இல்லாத இடத்துக்கு வாகன சாரதிகள் வேகத்தைக் குறைப்பதற்காக இரண்டு முக்கோணங்கள் இணைந்ததான அடையாளம் சாலைகளில் போடப்பட்டு வருகின்றது. இந்த அடையாளத்தில் இருந்து வாகன வேகத்தைக் குறைப்பதன் மூலம் முன்னால் ஐம்பது மீற்றர் தொலைவில் உள்ள பாதசாரிக் கடவையில் பாதையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு இலகுவாக பாதையை கடக்க வழிவிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: