சம்பந்தன் மக்களை தவறாக வழிநடத்துகிறார் – தேசியக் கூட்டுக் குழுவின் நிறைவேற்று உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க!

Wednesday, June 7th, 2017

எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்துடன் இணைந்து மக்களை தவறாக வழிநடத்தி வருவதாக தேசியக் கூட்டுக் குழுவின் நிறைவேற்று உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை அரசாங்கத்தை தற்போது மத்திய அரசாங்கம் என்று கூற முடியாது எனவும், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்து மத்தியில் இருக்கும் அரச அதிகாரத்தை இல்லாமல் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது எனவும் கெவிந்து குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரங்களுடன் கூடிய 9 நிறுவனங்களை உருவாக்கும் யோசனைகள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட உள்ளன.பிரிந்து செல்ல முடியும் என்று எந்த நாடும் அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வருவதில்லை. ஒரு நாட்டை பிரிக்க முடியுமா முடியாதா என்பதை அரசியலமைப்புச் சட்டத்தில் கூறவேண்டியதில்லை.

சிங்களத்தில் தேவையானால் ஒற்றையாட்சி என்று எழுதிக்கொள்ளுமாறும் அதன் ஆங்கில மொழிப்பெயர்ப்பையும் போட்டுக்கொள்ளுமாறும், ஆனால் யுனிடெரி என்ற வார்த்தையை போட இடமளிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், அரசியலமைப்பு நடவடிக்கைக்குழுவின் கூட்டத்தில், கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தனவிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மிகவும் ஆபத்தான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் தற்போது நாட்டு மக்கள் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்துள்ளது எனவும் கெவிந்து குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts: