க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சார்த்திகள் இருவேறு கோரிக்கை முன்வைப்பு – நியாயமான தீர்மானமொன்று எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, July 10th, 2021

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் எனினும், இந்த விடயம் குறித்து இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இம்முறை சுமார் 2 இலட்சம் மாணவர்கள், முதல் தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

அதேநேரம் குறித்த மாணவர்கள் தமக்கான பாடவிதானங்கள் உரிய முறையில் நிறைவு செய்யப்படாததால் பரீட்சையை பிற்போடுமாறும் கோரியுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரண்டாவது தடவையாக உயர் தர பரீட்சையில் தோற்றும் சுமார் ஒரு இலட்சத்து 50,000 மாணவர்கள், பரீட்சையை பிற்போட வேண்டாம் என கோரியுள்ளனர்.

இதனால் இந்த விடயம் குறித்து நியாயமான தீர்மானமொன்றை எடுக்க வேண்டியுள்ளதாகவும் பேராசிரியர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகளை ஆகஸ்ட் மாதத்தில் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: