கொழும்பு துறைமுக நகர சீன நிறுவனம் உலக வங்கியின் கறுப்புப் பட்டியலில்!

Tuesday, May 10th, 2016

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சிசிசிசி (China Communication Construction Company) என்ற சீன கட்டுமான நிறுவனம் உலக வங்கியினால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனம் என்று கூறி கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த துறைமுக அபிவிருத்திப் பணிகள் தமது தொழில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அகில இலங்கை மீனவர் சங்கம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இதனை அறிவித்ததாக அந்த சங்கத்தின் தலைவர் அருண ரொஷாந்த தெரிவித்தார்.

இவ்வாறான நிறுவனம் ஒன்றுடன் இலங்கை அரசாங்கம் எவ்வாறு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டது என்ற கேள்வியையும் வழக்கறிஞர் முன்வைத்தார்.

இதன்போது, ஆட்சேபனையை முன்வைத்த சீன நிறுவனத்தின் வழக்கறிஞர், சட்ட ரீதியாக இந்த மனு மீதான விசாரணையை முன்னெடுக்க முடியாது என்று கூறினார்.

அந்த ஆட்சேபனையை நிராகரித்த தலைமை நீதியரசர் ஸ்ரீபவன், ஆட்சேபனைகளுக்கு அடிபணிந்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தள்ளுபடி செய்ய முடியாது என்றார்.

மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜூன் 17 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Related posts: