கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் காவலில் உயிரிழந்தார்?

Wednesday, August 3rd, 2016

கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்னும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸாரின் காவலில் உயிரிழந்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன..

இது தொடர்பாக தெரியவருவதாவது,

கடத்தப்பட்டு காணாமல்போன இளைஞர் ஒருவரை மீட்டு கொடுப்பதாக கூறி பெருமளவு பணத்தை கபளீகரம் செய்த குற்றச்சாட்டின் கீழ் நேற்று யாழ்.நகரில் சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த க.கிருஸ்ணன்(57)என்பவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர் கடந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் நீர்வேலி பகுதியில் வைத்து கடத்தப்பட்ட இளைஞர் ஒருவரை மீட்டு கொடுப்பதாக கூறி அந்த இளைஞரின் சகோதரரிடம் இருந்து 2 இலட்சம் 87 ஆயிரம் ரூபாய் பணத்தை சூறையாடியிருந்தார்.

பின்னர் எந்த விதமான தொடர்பும் இல்லாத நிலையில் தலைமறைவான அவரை நேற்று யாழ்.நகரில் தற்செயலாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் மேற்படி கிருஸ்ணன் கைது செய்யப்பட்ட பின்னர் நடந்த விசாரணைகளில் மேற்படி பண பறிப்பு சம்பவத்துடன் படையினர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்குள் சந்தேகநபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றுமாறும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அவரை சந்திக்க வந்த பெண் ஒருவர் பை ஒன்றில் மதுபானம் மற்றும் கத்தி ஆகியவற்றை வழங்கியதாகவும், கிருஸ்ணன் மதுபானத்தை குடித்த பின்னர் கத்தியால் காணாமல் போன இளைஞனின் சகோதரனை குத்த முயன்று தனக்கு தானே காயத்தை உண்டாக்கியதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றய தினம் மாலை 6.30 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 8 மணியளவில் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நபரை தாம் தமது கட்டுப்பாட்டுக்குள் எடுக்கவில்லை எனவும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் வழியில் மேற்படி கிருஷ்ணன் என்பவர் காணாமல்போன இளைஞருடைய சகோதரனை போத்தலால் குத்த முயன்றதுடன் தானும் நஞ்சை உட்கொண்டு உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

Related posts: