குடாநாட்டில்  குற்றச்செயல்களைக்  கட்டுப்படுத்துவதற்கு விசேட நடவடிக்கை ஆரம்பம்!

Saturday, June 11th, 2016

யாழ்.குடாநாட்டில்  குற்றச்செயல்களைக்  கட்டுப்படுத்துவதற்கு விசேட நடவடிக்கை நேற்று முன்தினம் வியாழக்கிழமை(09-6-2016) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் பொலிஸார்  மக்கள் சந்திப்புக்களை நடாத்தி மக்களால்  தெரிவிக்கப்படும் கருத்துக்களையும், முறைப்பாடுகளையும் செவிமடுத்து நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராகியுள்ளனர்.

இந்த நடவடிக்கையின்  முதற்கட்டமாக நேற்று முன்தினம்  கொக்குவில் ஆடியபாதம் வீதியிலுள்ள கொக்குவில் கிழக்கு ஜே/123 கிராம சேவையாளர் அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்து நடைபெற்றது.  நிகழ்வில்  யாழ்.பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி சி.ஐ.வீரசிங்க கலந்து கொண்டிருந்தார்.

இந்தச்  சந்திப்புக்கள் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் தொடர்ச்சியாக நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இந்தச் சந்திப்புக்களின்  போது பொது மக்கள் தமது வீட்டுக்கருகில்  அல்லது வீதிகளில் இடம்பெறும்  குற்ற செயல்கள் குறித்துப்  பொலிஸாரின்  கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்துப் பொது மக்கள் கூறிய இடங்களைப் பொலிஸார்  தமது கண்காணிப்புக்கு உட்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

கிராமங்களில்  இடம்பெறும்  வாள்வெட்டுச்  சம்பவங்கள் மற்றும் குழு மோதல்களில் ஈடுபடுபவர்களைப்  பொது மக்களின்  பங்களிப்புடன் இனங்கண்டு, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts: