குடாநாட்டில் கதலி வாழைப்பழத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!
Wednesday, September 7th, 2016
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கதலி வாழைப்பழம் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது..
நல்லூர் ஆலய உற்சவம் நடைபெற்ற காலத்தில் 200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட கதலி வாழைப்பழம், விநாயகர் சதுர்த்திக் காலப்பகுதியில் 300 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.
கதலி வாழைப்பழத்திற்கான கேள்வி அதிகரித்து இருக்கும் நிலையில், சந்தைக்கு குறைந்தளவு கதலி வாழைப்பழங்கள் கொண்டு வரப்படுவதால் இந்த விலையேற்றம் அதிகரித்துள்ளது. விலையேற்றத்தால் பல கடைகளிலும் கதலி வாழைப்பழத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இதேவேளை, விலையேற்றத்தால் பிஞ்சு வாழைக்குலைகளை மருந்தடித்து விற்பனை செய்யும் செயற்பாட்டிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர். தற்போது, திருமண சீசன் ஆரம்பித்துள்ளமையால், வீடுகளில் வாசல்களில் கட்டப்படும், குலையுடன் கூடிய கதலி வாழைகளின் விலையும் அதிகரித்துள்ளது. முன்னர் ஒரு சோடி வாழை 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது, 8,000 ரூபாய் தொடக்கம் 12,000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
இதனைவிட இதரை வாழைப்பழம் கிலோ 100 ரூபாய்க்கும், கப்பல் வாழைப்பழம் 200 ரூபாய் தொடக்கம் 240 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. வாழை உற்பத்தியில் ஏற்பட்ட சரிவே இந்த விலையேற்றத்துக்கு காரணம் என வாழைச் செய்கையாளர்கள் கூறுகின்றனர்.

Related posts:
|
|
|


