கிளிநொச்சி வைத்தியசாலைக்கு தமிழ் தெரிந்த பதில் பணிப்பாளரை நியமியுங்கள் பொது மக்கள் கோரிக்கை

Tuesday, April 5th, 2016

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு பொது மக்களின் நலன் கருதி தமிழ் மொழி தெரிந்த பதில் பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தற்போது சிகிசையை தவிர ஏனைய விடயங்கள் ஆதாவது மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட பல தேவைகளின் பொருட்டு தற்போது பதில் கடமையாற்றிக்கொண்டிருக்கும் பதில் பணிப்பாளரை சந்தித்து தங்களது தேவைகளை  பூர்த்தி செய்துகொள்ள முடியாதுள்ளது எனவும், காரணம் ஒன்று மொழி பிரச்சினை மற்றையது அவர் பெரும்பாலும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்தியசாலையில்  காணப்படுவது இல்லை எனவும் குறிப்பிடும் பொது மக்கள்,

தாங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொலைதூர இடங்களில் இருந்து வருகை தந்து உரிய தேவையை நிறைவு செய்துகொள்ள முடியாதிருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போது பதில் பணிப்பாளராக கடமையாற்றுபவர் குழந்தை  மருத்துவ நிபுனராக இருப்பதனால் அவர் பதில்  பணிப்பாளர் பணியை மேற்கொள்ளும் காரணத்தை காட்டி விடுதி நோயாளர்களுகள், மற்றும் குழந்தைகளுக்கான சிகிசை  மேற்கொள்ளாது விடுகின்றார்  இதனாலும் பொது மக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.

எனவே தற்போது நியமிக்கப்படவுள்ள பதில்  பணிப்பாளர் நியமனத்தின் போது பொது மக்களின் நலன் கருதி தமிழ் தெரிந்த பதில் பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு அவர்கள் கோருகின்றனர்.

கடந்த காலங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு,செட்டிக்குளம், மன்னார், மல்லாவி வைத்தியசாலைகளுக்கான பதில் பணிப்பாளர் நியமனத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டு அதில்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையை தவிர ஏனை வைத்தியசாலைகளுக்கான பதில் பணிப்பாளர்கள் மாகாண சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மட்டும் மூன்று தடவைகள் பதில் பணிப்பாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகத்தேர்வு நடத்தப்படாது இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை

இந்த நிலையில் தற்போது புதன்கிழமை 06-04-2016 கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கான பதில் பணிப்பாளர் பதவிக்கான நேர்முகத்தேர்வு நடக்கவுள்ள நிலையில்  பொது மக்களால் இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாகாண அமைச்சின் கீழ் வருகின்ற  வைத்தியசாலைக்களுக்கான பதில் பணிப்பாளர்களை நியமிக்கும் முழு  அதிகாரமும் மாகாண சுகாதார அமைச்சுக்கே காணப்படுகின்ற நிலையில் மாகாண சுகாதார அமைச்சர், மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மாவட்ட மக்களின் நலன் கருதி இவ்விடயத்தில் அதிக கரிசனை செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts: