கிளிநொச்சியில் சிறுவர்கள் அடங்கலாக 37 பேருக்கு பன்றிச் காய்ச்சல்!

Tuesday, March 7th, 2017

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கடந்த 10 அன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அன்று தொடக்கம் கடந்த 03.03.2017 வரையான 21 நாட்களில் 244 பேர் இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் 25 கர்ப்பிணிகளும், 9 சிறுவர்களும் அடங்கலாக 37 பேர் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளமை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் பொது இடங்களில் ஒரே நேரத்தில் சந்தித்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உதாரணமாக ஒரு கிராமத்தில் இரு கர்பிணிகள் மரணவீடு ஒன்றில் சந்தித்துள்ளனர். இவர்களில் ஒருவர் மூலம் மற்றையவரும் பன்றிக் காய்ச்சல் தொற்றிற்கு இலக்காகியுள்ளார்.

எனவே அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்காவது கர்ப்பிணிகள் பொது மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்வதன் மூலம் பன்றிக் காய்ச்சல் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

மேலும் கர்ப்பிணிகளோ அல்லது பிரசவித்த தாய்மாரோ காய்ச்சல் ஏற்படின், உடனடியாக, காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நாளிலேயே அருகில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும், இதுவரை பன்றிக் காய்ச்சல் தொற்றுடன் இனங்காணப்பட்ட அனைத்துக் கர்ப்பிணிகளும் காய்ச்சல் ஏற்பட்ட தினத்திலேயே அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்றமையால் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டுக் குணமடைந்துள்ளனர்.

Related posts: