காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி, நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சொந்த இடத்தில் இயங்க வைக்க நடவடிக்கை !

காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரி, நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் மாதம் -02 ஆம் திகதி தொடக்கம் சொந்த இடத்தில் மீண்டும் இயங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அதிபர் பொ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
கடந்த கால போர்ச் சூழல் காரணமாக சுமார் 26 வருடங்களாக இந்த இரு பாடசாலைகளும் சொந்தவிடத்தில் இயங்க முடியவில்லை. இந்த நிலையியல் இந்த இரு பாடசாலைகளும் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயத்திற்கு அண்மையாகத் தற்காலிகமாக இயங்கி வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் -12 ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து இரு பாடசாலைகளையும் விடுவித்திருந்தார். இதனையடுத்து இரு பாடசாலைகளையும் சொந்தவிடத்தில் இயங்கச் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயத்தின் எல்லைப் பகுதியுடன் உயர் பாதுகாப்பு வலயம் ஆரம்பமாவதால் சில தடங்கல்கள் இருந்து வந்தன. எனினும் தற்போது இரு பாடசாலைகளும் இயங்குவதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதாக அதிபர் தெரிவித்தார்.
காங்கேசன் துறை நடேஸ்வராக் கல்லூரி கடுமையாகச் சேதமடைந்துள்ள காரணத்தால் ஆரம்பத்தில் இரு பாடசாலைகளும் நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயத்திலேயே இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலையை இயங்க வைப்பதற்கான புனரமைப்பு வேலைகள் நேற்று முன்தினம் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, மேற்படி இரு பாடசாலைகளையும் சொந்தவிடத்தில் இயங்க வைப்பது தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று இன்று வியாழக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழையில் தற்காலிகமாக இயங்கி வரும் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பாடசாலைச் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|