கலை என்பது சமகாலத்தை, சமூகத்தின் நடப்பியலை உணர்த்துகின்ற உயிர்ப்பு மையம் : ஓய்வு நிலைப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. கோகிலா மகேந்திரன்

Friday, April 29th, 2016

கவிதை என்பது ஒரு கலை, பாகுபாடற்ற ஒரு மொழி வடிவம், சமூகத்தின் பண்பாடு மீது நிலை கொண்டு நிற்பதாகும். பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறை . கலை சமுகத்தை எடுத்துணர்த்துகின்ற மையம்.  கலை அழிந்தால் சமூகம், மொழி என்பன அழிந்து விடும். இதற்கான செயற்பாடுகளில் ஒரு சிலர் திட்டமிட்டு ஈடுபடுகிறார்கள். எங்களுடைய கலையை, மொழியை, கலாசாரங்களை அழித்து விட்டால் எமது இனத்தையே அழித்து விட முடியும் எனக் கங்கணம் கட்டி நிற்கிறார்கள். கலை என்பது சமகாலத்தை, சமூகத்தின் நடப்பியலை உணர்த்துகின்ற உயிர்ப்பு மையம்.  . அஜந்தனின் கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதை எமனின் வாகனம் டிப்பர் எனச் சொல்லப்பட்டுள்ளது.  நாங்கள்  முன்னர் அவ்வாறு சொல்வதில்லை . யுத்தம் முடிவடைந்து எமது வீதிகள் 2014 ஆம் ஆண்டு காப்பெற் வீதியாக மாற்றம் பெற்றதன் பின்னர் தான் அவ்வாறு சொல்கிறோம். இவ்வாறான பதிவுகள் மூலம் யுத்தத்தின் பின்னர் நாம் எதிர்கொண்ட சவால்கள் தொடர்பில்  எமது எதிர்கால சந்ததிக்குச் சரியான புரிதலை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்  ஓய்வு நிலைப் பிரதிக் கல்விப் பணிப்பாளரும், எழுத்தாளரும் , உளவளத் துணையாளருமான திருமதி. கோகிலா மகேந்திரன்.

கந்தர்மடம் அ .அஜந்தன் எழுதிய  ‘ மனமெனும் கூடு ‘  கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா அண்மையில் யாழ்.கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற கலைத் தூது மண்டபத்தில் யாழ்ப்பாணம் தேசியக்  கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் கலாநிதி பா. தனபாலன் தலைமையில் இடம்பெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருமதி. கோகிலா மகேந்திரன் மேலும் உரையாற்றுகையில்,

சஞ்சிகைகள் , நூல்களில் எழுதுபவர்கள் சொல்ல வேண்டிய கருத்துக்களைத் தவிர்த்து வேறு விடயங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்ற போது அதுதான் சரியென்று ஆகிவிடுகிறது. கவிதை நூல்கள் , சிறுகதைகள் ,நாவல்கள் என்பவற்றைப்  படிக்கின்ற போது எழுத்தாளர்கள் தெளிவற்றவர்களாக இருந்தால் அதனூடாகச்  சமூகத்திற்குப்  பிழையான கருத்துக்கள் சென்றடைந்து விடும். எங்களுடைய எழுத்தாளர்கள் வேண்டுமென்றே இந்திய எழுத்தாளர்கள் போல ஜனரஞ்சகமாக கருத்துக்களை எழுதுபவர்களல்ல. ஆனால், ஒரு விஞ்ஞானபூர்வமற்ற ,மூட நம்பிக்கை கொண்ட சில கருத்துக்களைத் தங்களுக்குத் தெரியாமலேயே எழுத்து வடிவில் வெளியிடும் போது வாசகர்கள் அந்தக் கருத்துக்களை உள்வாங்கும் மன நிலை கொண்டவர்களாக மாறி விடுகிறார்கள்.  உதாரணமாக கடும் தண்டனை கொடுத்தால் தான் பிள்ளை படிக்கும்  எனும் சிந்தனை நூலாசிரியருக்கு இருந்தால் அதன் தாக்கம் சமூகத்தில் பிரதிபலிக்கும்.  அதனை நாங்களும் சரியென்றே கருதி விடுகிறோம். இவை நாங்கள்  வேண்டுமென்றே விடுகின்ற தவறுகள் அல்ல.

‘மனமெனும் கூடு ‘  கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்  தன்னுடைய கருத்துக்களில் மிகச் சரியாகவும் , தெளிவாகவுமிருக்கிறார். அவர் கவிதை எழுதுவதில் மட்டுமல்லாமல் அற்புதமான ஓவியராகவும் காணப்படுகின்றமை ஒவ்வொரு கவிதைக்கும் அவர் தீட்டியிருக்கும் ஓவியங்கள் மூலம் புலப்படுகின்றது.

நூலாசிரியர் அஜந்தனின் கவிதைகளின் கருப்பொருள்களின் ஊடாகச் சொல்லப்பட்டிருக்கும் முறைமையினூடாக அவரது கொள்கைகள் ,எண்ணங்கள் என்பன மிகத் தெளிவானவை. நூலாசிரியர்கள் அனைவரும் அவ்வாறு எழுதுவதில்லை.

கலை என்பது எங்களின் வாழ்க்கை முறை மட்டுமல்ல ஒருவித சிகிச்சை முறையும் கூட. கவிதை , சங்கீதம்  ,சிறுகதை, நாடகம் , ஓவியம் ஆகிய எந்தக் கலை வடிவங்களாக இருந்தாலும் கலைகளுடன் இணைந்து செயற்படுபவர்கள் அதன் மூலமாகத் தங்களுடைய உள்ளத்திற்கு நல்லதொரு சிகிச்சையைப் பெற்றுக் கொள்கிறார்கள். தங்களுடைய உணர்வுகளைக்  கலைஞர்கள் தங்கள் கலை வடிவங்கள் ஊடாக வெளிப்படுத்துவதன் மூலம் எழுதுபவரின் மனதிற்குச் சிகிச்சையாக அமைவதுடன் வாசகர்களுக்கும் சிகிச்சையாகவே அமைகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: