கலப்பு நீதிமன்றம் இலங்கைக்கு பொருத்தமற்றது – பிரதமர் ரணில் விக்ரமசிங்க!
 Saturday, March 4th, 2017
        
                    Saturday, March 4th, 2017
            
நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு கலப்பு நீதிமன்ற முறை இலங்கைக்கு பொருத்தமற்றது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கலப்பு நீதிமன்றத்தை உருவாக்க முடியுமா? அவ்வாறான யோசனை கொண்டுவந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியுமா? அவ்வாறில்லாவிட்டால் அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள முடியுமா என்றவாறு பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பு 12ல் அமைந்துள்ள நீதிமன்ற கட்டடத் தொகுதி வளாகத்தில் இடம்பெற்ற சட்ட ஒழுங்கு முறைக்கான தேசிய வாரத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது, நாட்டின் சட்டம் ஒழுங்கையும் நீதித்துறையின் சுயாதீனத் தன்மையையும் சமகால அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என்று கூறினார்.
இது பொதுமக்களுக்குக் கிடைக்கப் பெற்ற பாரிய வெற்றி என்று கூறிய பிரதமர், நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு சட்டம், ஒழுங்கு மிகவும் அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.
சமகால அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயகம் மற்றும் சுதந்திர எண்ணக்கருக்கள் சர்வதேச சமூகத்தின் பாராட்டை பெற்றுள்ளன என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        