கற்பகதரு சங்கங்களின் ஊடாக தென்னைச் செய்கையாளர்களுக்கு கடன்தொகை வழங்கப்படவுள்ளது
Thursday, January 18th, 2018
வடக்கு மாகாணத்தில் தென்னைச் செய்கையாளர்களுக்கு கற்பகதரு சங்கங்களின் ஊடாக சிறு தொழில் முயற்சிக் கடன் தொகை இன்று வழங்கப்படவுள்ளது என தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் வட பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:
எமது கற்பகதரு சங்கத்தில் பதிவுகளை மேற்கொண்டு அங்கத்தவர்களாக உள்ள தென்னைச் செய்கையாளர்களுக்கான சுழற்சி முறைக் கடன் அவர்களின் சிறு கைத்தொழில் முயற்சிக்காக வழங்கப்படவுள்ளது. முதல் கட்டமாக 10 சங்கங்களுக்கு ஊடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளது. இதற்காக எமது அமைச்சு 2 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
சிறு தொழில் முயற்சிகளான கயிறு திரித்தல், வீட்டுத் தோட்டம் போன்ற சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபா வருடத்துக்கு 10 வீத வட்டியுடன் வழங்கப்படவுள்ளது. இந்தக் கடனைப் பெறுபவர்கள் சிறு தொகை வீதம் சங்கத்துக்கு மீளச் செலுத்த வேண்டும். அதில் 6 வீத வட்டி சங்கத்துக்கும், 4 வீத வட்டி எமது தென்னை பயிர்ச் சபைக்கும் கிடைக்கும்.
கடனைப் பெறும் ஒருவர் தனது தொழில் முயற்சியை சிறப்பாக மேற்கொண்டு கடனை ஒரு வருடத்துக்குள் மீள செலுத்தினால் அதனை இன்னொரு சிறு தொழில் முயற்சியாளருக்கு வழங்குவோம். ஒரு சங்கத்துக்கு 2 லட்சம் ரூபா வழங்கப்படும். இந்தக் கடன் தொகைக்கான காசோலை நாளை வியாழக்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் 3 மணிக்கு வழங்கப்படவுள்ளது. இதில் 5 சங்கங்களுக்கான காசோலைகள் வழங்கப்படவுள்ளன.
சாவகச்சேரிப் பகுதியில் வைத்து மிகுதி 5 சங்கங்களுக்கான காசோலைகள் வழங்கப்படும். இவ்வாறு இந்தச் சுழற்சி முறைக் கடன் திட்டத்தின் கீழ் நூறு பயனாளிகளுக்கான சிறு தொழில் முயற்சிக்கான கடன்கள் வழங்கப்படும் என்றார்.
Related posts:
|
|
|


