கப்பம் கோரி கடத்தப்பட்ட மாணவன் மீட்பு!

Wednesday, December 14th, 2016

08 கோடியும் 75 இலட்சம் ரூபா கப்பம் கோரி கடத்தப்பட்ட வர்த்தகர் ஒருவரின் மகனான சுவர்ணாதிபதி குரனகே கவிஷ்க கிம்ஹான் குரேரா (17) என்ற பாடசாலை மாணவன் மீட்கப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவத்துள்ளனர்..

குறித்த மாணவன் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பதுடன், நடைபெற்றுக் கொண்டிருக்கு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் நிலையிலேயே கடத்தப்பட்டுள்ளார்.

தங்கொட்டுவ, கொடெல்ல வித்தியாலய மைதானத்திற்கு நேற்று விளையடச் சென்ற மாணவன் பகல் 1 மணியாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடிப் பார்த்துள்ளனர்.  மகனின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போதும் அதற்கு பதில் கிடைக்கவில்லை.

இரவு தந்தையின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய குறித்த மாணவன், அறிமுகமற்ற சிலர் தன்னை கடத்தியிருப்பதாகவும், தான் இருக்கும் இடம் தெரியாதென்றும் கூறியுள்ளார்.
அத்துடன், மகன் தேவையென்றால் 08 கோடியும் 75 இலட்சம் ரூபா பணம் தருமாறும், இல்லையென்றால் மகனை கொன்று விடுவதாகவும், மகனின் தொலைபேசியூடாக தந்தையுடன் பேசிய கடத்தல்காரர் கூறியுள்ளார்.

அந்தப் பணத்தை 13ம் திகதி இரவு 12.00 மணிக்கு முன்னர் தருவதாக முதலில் கூறியுள்ள பெற்றோர், பின்னர் 17ம் திகதி வரை அவகாசம் எடுத்துள்ளனர். ஷ

பின்னர் இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து, வர்த்தகரான சுவர்ணாதிபதி குரனகே நிஷாந்த சம்மிக குரேரா (35) என்பவர் தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் 13ம் திகதி இரவு முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி உடனடியாக செயற்பட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குறித்த மாணவன் 14ம் திகதி அதிகாலை தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள மூடப்பட்ட எண்ணெய் ஆலையில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவனை கடத்தியவர்கள் தொடர்பிலான எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

 kidnap700

Related posts: