கண் நோய் பரவும் அபாயம் : சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Tuesday, April 11th, 2017

நாட்டில் நிலவிவரும் கடுமையான வெய்யிலுடன் கூடிய காலநிலை காரணமாக கண் சார்பான நோய்கள் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் காணப்படுவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெயிலில் பயணிக்க வேண்டி ஏற்பட்டால் தரமான கண்ணாடிக ளைப் பயன்படுத்துமாறும், வெய்யிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கு குடைகளை எடுத்துச் செல்லுமாறும் கேட்டுள்ளது.

முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 4 மணி வரையான காலப் பகுதியில் அநாவசியமாக வெயிலில் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் சுகாதாரத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

வெய்யில் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர் அருந்துவது மிகவும் உகந்தது என்றும், வெய்யிலில் பயணித்து வீடு திரும்பியதும், கண்கள் மற்றும் முகத்தை நீரினால் கழுவுமாறும், இவ்வாறு செய்வதன் ஊடாக கண் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு நேராக சூரியன் உச்சங்கொண்டிருப்பதால் அதிக வெப்பநிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை இந்த கடுமையான வெப்பம் காணப்படும் என்றும், இம்மாத இறுதி வரை தொடர்ச்சியான வெப்பம் இருக்கும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டைச் சுற்றியுள்ள பகுதியில் மிகவும் குறைந்த காற்றுநிலை காணப்படுவதால் அதிகவெப்பம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: