கடும் மழை பாதிப்பால் யாழில் இருவர் மரணம்

Tuesday, November 7th, 2017

கடும் மழை பாதிப்புக்காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இவ்விரு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

யாழ்.நகரை அண்டிய வண்ணார்பண்ணை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கடும் மழை பெய்துகொண்டிருந்த போது இயற்கை கடன் கழிப்பதற்கு வெளியில் சென்ற முதியவர் பாசியில் சறுக்குண்டு முகம் குப்புற வீழ்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காரைக்கால் வீதி   வண்ணார்பண்ணையைச் சேர்ந்த தியாகராஜா இராமநாதன் (வயது-63) என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக யாழ்.பொலிஸார் கூறினர்.

வெளியில் சென்றவரை காணாத நிலையில் அவரது மனைவி தேடிச் சென்ற போது முகம் குப்புற விழுந்த நிலையில் அவர் காணப்பட்டார்.

அசைவற்ற நிலையில் கிடந்த அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். எனினும் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டததாகக் கூறினர். இதே போன்று அனலைதீவு   5 ஆம் வட்டாரம் பகுதியில் மழைநீரில் சறுக்குண்டு விழுந்து காயமடைந்தநிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிப மாது ஞாயிறு இரவு உயிரிழந்தார். சம்பவ இடத்தைச் சேர்ந்த முருகன் பொன்னம்மா (வயது-86) என்பவரே உயிரிழந்தவர் என ஊர்காவற்றுறை பொலிஸார் கூறினர். மரணங்கள் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

சட்டவைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப்பரிசோதனையின் பின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

Related posts: