கடந்த 20 வருடங்களுக்கும்  மேலாகத் திருத்தப்படாதிருக்கும் கரந்தன் வீதி : பயணிகள் விசனம்!

Friday, March 18th, 2016

வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான ஊரெழு கிழக்கிலிருந்து நீர்வேலி கரந்தன்  சந்தி வரையான கரந்தன் வீதி கடந்த 20 வருடங்களுக்கும்  மேலாகத் திருத்தப்படாத காரணத்தால் இந்த வீதியால் தினம் தோறும் போக்குவரத்துச் செய்யும் பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் மூன்று கிலோமீற்றர் நீளமுள்ள இந்த வீதி பல வருடங்களாகத் திருத்தப்படாத காரணத்தால் மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளது. வீதிகளின் பல இடங்களிலும் பாரிய குன்றும் குழிகளும் காணப்படுவதால் இந்த வீதியால் போக்குவரத்துச் செய்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த வீதி பலாலி வீதியையும், இராச வீதியையும் இணைக்கும் முக்கிய கிளை விதியாகும். இதன் காரணமாக ஊரெழு, நீர்வேலி, கோப்பாய், உரும்பிராய்,புன்னாலைக் கட்டுவன் எனப் பல இடங்களிருந்தும் இந்த வீதியால் நூற்றுக் கணக்கான மக்கள் தினம் தோறும் பயணம் செய்கின்றனர். சுன்னாகம், மருதனார்மடம் சந்தை மற்றும் நீர்வேலி வாழைக் குலைச் சந்தைக்குச் செல்லும் விவசாயிகளும் வீதி திருத்தப்படாத காரணத்தால் தங்கள் உற்பத்திப் பொருட்களை எடுத்துச் செல்வதில் சிரமங்களைச் சந்திக்கின்றனர்.

இது தொடர்பாகப் பல தடவைகள்  பிரதேச செயலகம், வலி.கிழக்குப் பிரதேச சபை ஆகியவற்றின் கவனத்துக்குக் கொண்டு சென்ற போதும் வீதியை முழுவதுமாகப்  புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஊரெழு கிழக்குப் பாரதி சனசமூக நிலைய நிர்வாகமும், அப் பகுதிப் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

சுமார் 150 கிலோ மீற்றர் நீளமான பகுதி மாத்திரமே கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் புனரமைக்கப்பட்ட போதும் எஞ்சிய பகுதியைப் புனரமைக்க நிதி இல்லை எனக் கைவிரித்துள்ளதாகவும்  தெரிய வருகிறது. எனினும் புனரமைக்கப்பட்ட பகுதியும் தரமற்றதாக உள்ளதாகவும்  மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, குறித்த வீதியின் முக்கியத்துவம் கருதி வீதியை புனரமைப்புச் செய்ய உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை  எடுக்க வேண்டுமென அப் பகுதிப் பொதுமக்களும், போக்குவரத்துச் செய்வோரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

13e89328-93b4-4297-8614-4f510da592b3

Related posts: