ஓய்வுபெற்ற நீதியரசர் சரத் அப்றூவின் மரணம் தொடர்பில் சந்தேகம் ? பல கோணங்களில் விசாரணை!

Wednesday, August 17th, 2016

தனது வீட்டின் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த, உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சரத் அப்றூவின் மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மும்முரமாக முன்னெடுத்து வருவதாக, கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரது மரணம், தற்கொலையா, தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டாரா, அல்லது சுயநினைவிழந்த நிலையில் விழுந்து உயிரிழந்தாரா என்ற கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

ஓய்வுபெற்ற நீதியரசரின் இரண்டு மாடிகளைக் கொண்ட கல்கிஸை வீட்டில் நீதியரசர் அவரது மனைவி, மகள், பணிப்பெண் மற்றும் மகளுக்கு கற்பிக்கும் ஆசிரியை ஆகியோரே தங்கியிருந்துள்ளனர். சம்பவ தினத்தன்று காலை வேளையில், நீதியரசருக்கு ஏற்பட்ட உடல் உபாதை காரணமாக, அவர் வழமையாக சிகிச்சைக்குச் செல்லும் கட்டுபெத்தயில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலையொன்றுக்குச் சென்று திரும்பியிருந்தார் என்றும், பின்னர் அவர், மேல் மாடியிலுள்ள அவரது அறைக்குச் சென்று ஓய்வுவெடுத்தார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது, அவரது அறையிலிருந்து மதுபானப் போத்தலொன்றும் கண்ணாடிக் குவளையொன்றும், சிகரெட் பக்கெற் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் தனது அறைக்குள்ளிருந்து, அன்றைய தினம் காலை மதுவருந்தியுள்ளார் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தனது அறைக்குள் சிலமணி நேரம் இருந்துள்ள அவர், பின்னர் மாடியின் முன்பாகத்தில் (பெல்கனி) வந்து நின்றுகொண்டு, அவரது மகளை கடுமையாகப் பேசியுள்ளார் எனவும் வீட்டுக்குள் வரும் கடிதங்கள் தொடர்பில் மகள் கவனிப்பாரற்று இருந்துள்ளமைக்காக கடும் கோபமடைந்திருந்ததாகவும், அதன் பின்னரே அவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் என்றும் தெரியவருகின்றது.

போதையில் இருந்துள்ள அவர், கோபத்தில் சத்தம் போட்டுக்கொண்டிருந்த போது, தட்டுத்தடுமாறி கீழே விழுந்தாரா?, கோபத்தில் கீழே குதித்தாரா, அல்லது எவரேனும் தள்ளிவிட்டார்களா என்பது தொடர்பில், சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

மாடியின் முன்பக்கத்திலிருந்து, 16 அடிகள் கீழேயுள்ள சீமெந்துக்கற்கள் பதிக்கப்பட்டுள்ள வீட்டு வாசலிலேயே அவர் விழுந்துள்ளார். கீழே விழுந்த அவரது தலை, சீமெந்துக்கற்களில் பட்டு நசிந்துள்ளதாகவும்,அதனால் அவருக்கு அதிகளவில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டிலிருந்த ஆசிரியையே, சம்பவத்தைக் கண்டு, பாதையில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டிச் சாரதியொருவரை அழைத்துக்கொண்டு வந்துள்ளார். அவரின் உதவியுடனேயே நீதியரசருக்குச் சொந்தமாக ஜீப் வண்டியில் அவரை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். இருப்பினும், அதிக இரத்தப்போக்கு காரணமாக, வைத்தியசாலைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

நீதியரசரின் மகள், போதிய மனநிலையில் இல்லாமையால், அவரது கல்வி நடவடிக்கைகளுக்காக, வீட்டில் தங்கியிருந்தே கற்பிக்கும் வகையில் மேற்படி ஆசிரியர் தங்கவைக்கப்பட்டுள்ளார் என்றும், நீதியரசர் மாடியிலிருந்து குதித்ததைத் தான் கண்டதாக அந்த ஆசிரியையே, பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில், சீ.சீ.டிவி கமெராப் பதிவுகளைக் கொண்டு, விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக, கல்கிஸை பொலிஸார் மேலும் கூறினர்.

Related posts: