எமது மக்களின் பல மில்லியன் ரூபா பணத்தினைச் சுருட்டிக் கொண்டு செல்வதை அனுமதிக்க முடியாது: வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்!

Saturday, October 8th, 2016

தென்னிந்தியாவிலிருந்து இங்கு வருகை தந்து இசை நிகழ்வை நாடாத்தி விட்டு எமது மக்களின் பல மில்லியன் ரூபா பணத்தினைச் சுருட்டிக் கொண்டு செல்வதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

தென்னிந்தியாவின் பிரபல பாடகர் எஸ்.பி .பாலசுப்பிரமணியம் மற்றும் கங்கை அமரன் இசைக் குழுவினர் இணைந்து நாளை பிற்பகல் யாழ். நகர சபை மைதானத்தில் நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இந்த இசை நிகழ்ச்சி தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை(07) பிற்பகல் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கலாசார ரீதியாக, எங்களுடைய பண்பாட்டு ரீதியாகத் தமிழகத்துடனும், இந்தியாவுடனும் நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவையிருக்கிறது என்பதனை நாங்கள் மறுக்கவில்லை. போரின் போது  இருந்த நிலை மாற்றமடைந்து மேம்படுத்தப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம். ஆனால், போர் நடைபெற்ற போது அல்லது அதன் பின்னர் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, அவர்களில் பலரும் அவயவங்கள் இழந்து, அல்லல்பட்டு, அநாதைகளாக்கப்பட்டு, பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை இழந்துள்ள நிலையில்  அவர்களின் மறு வாழ்வுக்காகக் கோடான கோடி பணம் தேவைப்படுகின்றது.

தென்னிந்தியாவிலிருந்து இங்கு வருகை தந்து இசை நிகழ்வை நாடாத்தி விட்டுப் பல மில்லியன் ரூபாவுடன் அவர்கள் செல்வது என்பது கவலையளிப்பதாக அமைந்துள்ளது. ஆகவே, இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தாங்கள் பெற்றுக் கொள்ளும் வருமானத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிய வேண்டும். குறித்த இசை நிகழ்வை நடாத்துகின்ற நிறுவனங்களே பயனாளிகளைத் தெரிவு செய்து வழங்குவதுடன் ஊடகங்களில் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். அல்லது அவர்கள் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் குறித்த பணத்தை ஒப்படைக்கும் பட்சத்தில் வெளிப்படைத் தன்மையுடன் பயனாளிகளைத் தெரிவு செய்து வழங்க முடியும் என்றார்.

unnamed

Related posts:


தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை - அவர்கள் மீது கடுமையான குற்றச்...
யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார சேவைகள் பணிப்பாள...
ஆறு மாத காலத்தில் 428 முறைப்பாடுகள் - சொத்து மோசடி தொடர்பில் 42 பதிவுகள் - இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்க...