எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவு !

Friday, April 27th, 2018

கொழும்பு புறநகர் பகுதியான ஹொரணை பெல்லம்பிட்டி பகுதியிலுள்ள இறப்பர் தொழிற்சாலை உரிமையாளர், முகாமையாளர், மற்றும் கட்டுப்பாட்டாளர் ஆகியோரை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இம் மாதம் 19ம் திகதி ஹொரணை பகுதியிலுள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் போது 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 15 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

தொழிற்சாலையில் இருந்த அமோனியா அமிலம் அடங்கிய குழியை சுத்தம் செய்வதற்காக சென்ற ஊழியர் ஒருவர் அக்குழிக்குள் விழுந்ததை அடுத்து அவரை காப்பாற்றச் சென்ற அப்பிரதேச மக்கள் நச்சுவாயுவை சுவாசித்ததன் காரணமாக பாதிப்படைந்திருந்தனர்.

சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற பொலீஸார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் உரிய முறையில் கடைபிடிக்கப்படாமையினால் 5 பேரின் இழப்பிற்கு காரணமாகவிருந்த குற்றச்சாட்டின் பேரில் தொழிற்சாலையின் முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.

மறுநாள் 20ம் திகதி குறித்த தொழிற்சாலையினை மூடுமாறு மேல்மாகாண முதலமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார். அத்துடன் பொலீஸாரினால் கைது செய்யப்பட்ட தொழிற்சாலை முகாமையாளர் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் கட்டுப்பாட்டாளர் ஆகியோரை 27ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்றையதினம் 5 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த தொழிற்சாலை உரிமையாளர் முகாமையாளர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் முன்னிலையானார்.

நீதிமன்ற விசாரணையை அடுத்து தொழிற்சாலை முகாமையாளர், மற்றும் உரிமையாளர், கட்டுப்பாட்டாளர் ஆகியோரை அடுத்தமாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts: