எதிர்வரும் வாரத்தில் மன்னார் மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை – மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Wednesday, July 14th, 2021

மன்னார் மாவட்டத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையை கடந்த கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் 1 வயதிலும் குறைந்த குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வினோதன் இதுதொடர்பாக தெரிவிக்கையில் –

இந்த மாவட்டத்திற்கென மேலும் வழங்கப்பட்டுள்ள 22  ஆயிரத்து 230 ‘பைஸர்’ தடுப்பூசிகள் முதல் 30 வயதிற்கு மேற்பட்ட மன்னார் மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாக கொண்டவர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்ரு

மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் சமூகத்தடுப்பூசி வழங்களினுடைய 2 ஆவது கட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 3 ஆவது கட்டம் இடம்பெற்று வருகின்றது.

2 ஆவது கட்டத்தில் பாதுகாப்பு படையினரால் வநனியோகிக்கப்பட்ட 5 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமைமுதல் திங்கட்கிழமைவரை கிடைக்கப்பெற்ற 20 ஆயிரம் ‘பைஸர்’ தடுப்பூசிகளில் 19 ஆயிரத்து 500 வரையிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது.

செப்டெம்பர் மாதம் நாட்டை முழுமையாக திறக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் சிந்தனையின் அடிப்படையில் இந்திய மீனவர்களுடன் தொடர்புபடுகின்ற மன்னார் மீனவர்களினால் ஏற்படக்கூடிய கொரோனா அச்ச நிலையை நீக்குவதற்காக மன்னார் மாவட்டத்திற்கு விசேடமாக குறித்த தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது.

அதேபோன்று கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் 1 வயதிலும் குறைந்த குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களுக்கு பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தேவையில்லை. இவர்களுக்கு விசேட விதமாக வேறு நிலையங்களில் எதிர்வரும் வாரம் வழங்கப்படும்.

இதேவேளை இது வரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 899 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 882 பேர் இந்த வருடம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்தில் தற்போது வரை 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: