உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 27 ஆயிரம் பரீட்சார்த்திகள் மூன்று பாடங்களிலும் சித்தியடையவில்லை – கல்வி முறைமையில் பாரிய பின்னடைவு என அவதானிகள் சுட்டிக்காட்டு!
Monday, June 3rd, 2024
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களில் 27,970 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை என பரீட்சைத் திணைக்கள உயர் அதிகாரி ஒருவரை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. .
அதன்படி, பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களில் 10.04 வீதமானவர்கள் இவ்வாறு சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேநேரம் மூன்று பாடங்களிலும் ‘A’ சித்தியை 10,484 பரீட்சார்த்திகள் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இது 3.9 வீதம் எனவும் கூறியுள்ளார்.
விண்ணப்பித்தவர்களில் 173,444 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இது 64.33 வீதம் ஆகும்.
இவ்வருடம் பரீட்சைக்கு தோற்றிய 190 விண்ணப்பதாரிகளின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 146 தனியார் விண்ணப்பதாரர்களும் 44 பாடசாலை விண்ணப்பதாரர்களும் உள்ளதாகவும் தெரிவித்துளார்.
இதேநேரம் 2023 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதம் ஆண் பரீட்சார்த்திகளின் வீழ்ச்சியையும் பெண் பரீட்சார்த்திகளின் அதிகரிப்பையும் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கு தோற்றிய விண்ணப்பதாரிகளின் பெறுபேறுகளை ஆராயும் போது இது தெளிவாக உள்ளது எனவும் இது கல்வித்துறையில் உள்ள அனைவரும் அவதானம் செலுத்த வேண்டிய நிலை என குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல் நிலைமைகள் காரணமாக உரிய முறையில் பாடசாலைக் கல்வியைத் தொடர முடியாமல் தவித்த மாணவர் குழுவொன்று இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதாக அவர் கூறினார்.
மேலும், பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களில் 27,000 பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடையாமை இலங்கைக் கல்வி முறைமையில் பாரிய பின்னடைவை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர்தர மீள் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக பரீட்சை திணைக்களத்தின் ஒன்லைன் முறையானது ஜூன் மாதம் 5 ஆம் திகதிமுதல் 19 ஆம் திகதி வரை திறக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 229,057 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதோடு 40,556 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


