இளைஞர்களுக்கு உள்ளூராட்சி தேர்தல்களில் இடம் வேண்டும்!

Tuesday, October 10th, 2017

உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளின் ஊடாக வேட்பாளர்களை தெரிவுசெய்யும் போது இளைஞர்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வவுனியா மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீகரன் கேசவன் கேட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

அரசியலில் ஈடுபட விரும்பும் இளையோருக்கு வாய்ப்பளிக்கும் முகமாகவே இந்தத் தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. 2017 ஜுன் 2 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் இளைஞர் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக இளையோர் அரசியலில் பிரவேசிக்கும் பாதை தடைப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆளும் தரப்பினருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனவே கட்சிகளின் ஊடாக வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது இளைஞர்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டும். குறிப்பாக தமிழ்த் தலைமைகள் இளையோருக்கு வாய்ப்பளித்து வினைத்திறனான சமூகத்தை உருவாக்குவதற்கு துணைநிற்க வேண்டும் – என்றார்.

Related posts: