இலங்கை நல்லிணக்கம் நோக்கிய பாதையில் பயணிக்கிறது – மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன்

Friday, March 11th, 2016

இலங்கை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பாதையை நோக்கி பயணிப்பதாக ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வில் வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றியஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமையும் என தெரிவித்த அவர், பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் மற்றும் நிலைத்திருக்கக் கூடிய சமாதானம் என்பவற்றை நிறைவேற்றுவதற்கான பயணத்தை நோக்கி இலங்கை செல்வது பாராட்டப்பட வேண்டியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பை மறுசீரமைத்தல், சுயாதீன நிறுவனங்களை புதுப்பித்தல் மற்றும் கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்துக்கான சூழ்நிலையை உறுதிப்படுத்தல் ஆகியன தொடர்பில் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இதனால்இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பலமான சமிக்ஜைகள் தென்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுகின்றமை, இராணுவம் வசமிருந்த காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை, காணாமல் போனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் இவற்றுள்ள அடங்குவதாகவும் இந்நிலையில் தேசிய அரசியலமைப்பை இலங்கை தயாரிக்கவுள்ள நிலையில் எதிர்வரும் மாதங்கள் முக்கியமான மாதங்களாக அமையும் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

Related posts: