இலங்கை- இந்தியா இடையே விரைவில் பாலம்!

Wednesday, April 13th, 2016
இலங்கை யுஇந்தியாவுக்கு இடையில் பாலமொன்றை நிர்மாணிப்பது தொடர்பான உடன்படிக்கை விரைவில் நிறைவு செய்யப்பட உள்ளதாக இந்திய மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சந்திப்பின் போது இந்தத் திட்டம் குறித்து தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகக் கூறியுள்ள அவர், இதுவரையில் இத்திட்டம் பூரணப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து, இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் இந்திய மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ள பூரண நிதியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே பாலம் அமைக்க முயற்சித்து வருவதாக இந்திய மத்திய கனரக மற்றும் பொதுத் தொழில்கள் துறை இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: