இலங்கையில் கடந்த வருடம் 51 பேருக்கு மரண தண்டனை!

Thursday, April 7th, 2016

கடந்த வருடம் மாத்திரம் இலங்கையில் குறைந்தது 51 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மரண தண்டனை தொடர்பான அதன் வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயத்தை, அச்சபை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையின்போது, வேண்டுமென்றே கொலை செய்தமை தவிர்ந்த குற்றங்களுக்காக – உதாரணமாக போதைப்பொருள் குற்றங்கள் – மரண தண்டனை விதிக்கும் நாடுகளுக்கு உதாரணமாக வழங்கப்பட்டுள்ள 12 நாடுகளில், இலங்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்தது 3 மரண தண்டனைகள், இவ்வாறு போதைப்பொருள் குற்றங்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாக அச்சபை தெரிவிக்கிறது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமாரவை மேற்கோள்காட்டி, தற்போது 1,115 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறைகளில் உள்ளதாகவும் அவர்களில் 600 பேர், தங்களுடைய தண்டனைகளுக்கெதிராக மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இது தவிர, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களில் 10 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பில், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுத் தலையிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் ஏழு பேர் ஐக்கிய அரபு அமீரகத்திலும் இருவர் சவூதி அரேபியாவும் ஒருவர் லெபனானிலும் உள்ளார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 25 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட ஆண்டாக, 2015ஆம் ஆண்டு அமைந்துள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்தள்ளது. கடந்தாண்டில், ஆகக்குறைந்தது 1,634 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாகவும் அச்சபை தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது, கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை, 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட 1,634 மரண தண்டனைகளில் ஏறத்தாழ 90 சதவீதமான மரண தண்டனைகள், ஈரான், சவூதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிடுகிறது.

குறைந்தது 977 பேர் ஈரானில், கடந்தாண்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர், போதைப்பொருள் சம்பந்தமான குற்றங்களுக்காகவே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். பாகிஸ்தானில் 320 மரண தண்டனைகளும் சவூதி அரேபியாவில் குறைந்தது 150 மரண தண்டனைகளும் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

அமெரிக்காவில், கடந்தாண்டு 28 பேரின் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது, 1991ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்நாட்டில் மிகக்குறைந்த அளவிலானோர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட ஆண்டாகும்.

கடந்தாண்டு இறுதியின்படி, 102 நாடுகள், மரண தண்டனையை இல்லாதொழித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, 1996ஆம் ஆண்டில் வெறுமனே 60 நாடுகள் மாத்திரமே அவ்வாறு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் கொங்கோ, பிஜி, மடகாஸ்கர், சுரினம் ஆகிய நான்கு நாடுகளே, மரண தண்டனையைப் புதிதாக இல்லாதொழித்துள்ளன.

ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளும் தலா ஒவ்வொரு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளன. பங்களாதேஷில் 4, ஜப்பானில் 3, சிங்கப்பூரில் 4, தாய்வானில் 6 ஆகியன, கணிப்பிடப்பட்ட மரண தண்டனைகளாக உள்ளன. சீனா, மலேஷியா, வடகொரியா, வியட்னாம் ஆகிய நாடுகளில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவை தொடர்பான தரவுகள் வழங்கப்படவில்லை.

உலகில் மரண தண்டனைகளை அதிகம் நிறைவேற்றும் நாடுகளில் சீனாவும் வடகொரியாவும் உள்ளடங்குகின்ற போதிலும், அது தொடர்பான தரவுகளை அந்நாடுகள் வெளியிடுவதில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, சீனாவில் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை, ஆயிரங்களில் காணப்படுமெனத் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தவிர, இந்தியாவில் குறைந்தது 75, பாகிஸ்தானில் 121 மரண தண்டனைகள், கடந்தாண்டு மாத்திரம் விதிக்கப்பட்டுள்ளன.

Related posts:

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுப்பு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரி...
இணையவழியில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பரீட்சைகள...
மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல சேர்த்துக்கொள்ளுமாற...