இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு காத்திரமானது – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராட்டு!

Monday, August 14th, 2023

இலங்கை நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்தில் உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கு எப்போதும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த இலங்கையின் பொருளாதாரம் தற்போது வளர்ச்சிப்பாதையை நோக்கி நகர்வதற்கு இந்தியா முக்கிய பங்கை வகித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் அதற்காக இலங்கை அரசாங்கம் இந்தியாவை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்..

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஏ.என்.ஐக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே இவ்வாறு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது –

“இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா பிரதான உதவியாளராக இருந்துள்ளது. பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் காத்திரமானதாகவும் இருந்துள்ளது. மிகவும் நெருக்கடியான சூழலிலேயே இந்தியாவின் பங்களிப்பு இலங்கைக்கு கிடைத்திருந்தது.

இலங்கை நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்தில் உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கு எப்போதும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

எமது பொருளாதார தற்போது மெல்ல மெல்ல வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சிப்பாதையில் செல்வதையிட்டு இந்தியா மகிழ்ச்சியடையுமென நினைக்கிறோம்.

சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் மறுசீரமைப்பு செயற்றிட்டம் மற்றும் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளவும், பாரிஸ் கிளப்புடனான பேச்சுவார்த்தைகளிலும் இந்தியா எமக்கு உதவிகளை வழங்கி வருகிறது.

கடன் மறுசீரமைப்புக்கான முதல் உத்தரவாதத்தை இந்தியாதான் வழங்கியிருந்தது. அது மிகவும் வலுவானதொரு உத்தரவாதமாகவும் இன்றுவரை உள்ளது. அதேபோன்று கடன் திட்டத்திற்கான இணை அனுசரணையையும் வழங்கியுள்ளது“ என்றும் தெரிவித்துள்ளார்..

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன், இலங்கை முன்னெடுத்துவரும் பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன். நிறைவுக்கு வருமென அரசாங்கம் கூறியுள்ளதுடன், செப்டெம்பரில் இடம்பெறும் பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கைக்கு இரண்டாம் கட்ட கடன் திட்டம் கிடைக்கும் எனவும் அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: