இறைச்சிக்காக கால்நடைகள் திருடப்படுவதாக கால்நடை வளர்ப்போர் குற்றச்சாட்டு!

Friday, June 1st, 2018

முல்லைத்தீவு – குமுளமுனை பிரதேசத்தில் இறைச்சிக்காக கால்நடைகள் திருடப்படுவதாக கால்நடை வளர்ப்போர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுளமுனை பகுதியில் பட்டிகளில் இருந்து தொடர்ச்சியாக கால்நடைகள் இரவு நேரங்களில் திருடப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இறைச்சிக்காக திருடப்படும் பசு மாடுகள் அருகிலுள்ள காடுகளில் வைத்து வெட்டப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக பண்ணையாளர்கள் குறிப்பிட்டனர்.

இம்மாதத்தில் மாத்திரம் நான்கு பண்ணையாளர்களின் 16 கன்றுகள் உட்பட மாடுகள் இறைச்சிக்காக திருடப்பட்டுள்ளன. மாடுகள் திருடப்படுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், திருட்டினை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கால்நடை வளர்ப்போர் குற்றம் சுமத்தினர்.

எனினும், குமுளமுனையில் மாடுகள் திருடப்படுவது தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இரவு நேரங்களில் பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts: