இரணைதீவு மக்கள் சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் – வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன்

Saturday, April 8th, 2017

இரணைதீவுப் பகுதியில் மக்கள் மீளக்குடியமர்ந்து அங்கு கடற்றொழில் உள்ளிட்ட தொழிற்றுறைகளை மேற்கொள்ளும் போதே வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் மேம்பாடடையும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும், வடமாகாண சபை உறுப்பினருமான தவநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் அதிகளவான கடல்வளத்தைக் கொண்ட பகுதியாக இரணைதீவு இருந்தபோதிலும் இப்பகுதில் மக்கள் இன்றுவரையில் மீளக்குடியமர முடியாத நிலையே இருந்து வருகின்றது.

யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்களை எட்டியுள்ள போதிலும் எமது மக்களின் அவலவாழ்வும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. குறிப்பாக தமது சொந்த இடங்களுக்கு சென்று மீளக்குடியேறுவதில் எமது மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

படைத்தரப்பினர் நிலைகொண்டுள்ள தமது பகுதிகளை தம்மிடம் மீளவும் ஒப்படைக்கப்பட வேண்டுமெனக் கோரி, தமிழ் மக்கள் நிலமீட்பு போராட்டத்தை முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறாக மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் பயனாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழான கேப்பாப்புலவு பிலக் குடியிருப்பின ஒரு தொகுதியும் படைத்தரப்பினரால் விடுவிக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் கீழான மக்கள் குடியிருப்பின் ஒருபகுதியும் தொடர்ச்சியான போராட்டத்தையடுத்து படைத்தரப்பினரால் மக்களின் கையளிக்கப் பட்டிருந்ததையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இரணைதீவுப் பகுதியிலிருந்து 1992 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதியீனங்களுக்கு மத்தியில் தற்போது இரணைமாதா நகரில் வாழ்ந்து வரும் நிலையில், குறித்த பகுதியில் மக்களை மீள்குடியேற்றுவதிலோ, அல்லது கடற்றொழில் செய்யவோ இதுவரையில் அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே இரணைதீவுப் பகுதியில் மக்கள் மீளக்குடியேற்றம் செய்யப்படும் அதேவேளை, அங்கு கடற்றொழில் செய்வோர் சுதந்திரமாக தொழில் செய்யக் கூடியதான இயல்புநிலை தோற்றுவிக்கப்பட வேண்டுமென்ற நோக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இரணைதீவு மற்றும் இரணைமாதாநகர்ப் பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராந்தறிந்து கொண்டதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்நிலையில் கடந்த மாதம் இரணைதீவை நகரை விடுவித்து தம்மை அங்கு மீளக்குடியேற அனுமதிக்குமாறு கோரி பூநகரி பிரதேச செயலகத்தின் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில், இரணைமாதா நகரில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை விரைவில் நடாத்தவுள்ளதாகவும், அதனடிப்படையில் அந்த மக்களின் கோரிக்கைகளும் ஏக காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதே தமது விருப்பமாகும் என்றும் தவநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: