இந்தியாவுடனான உறவு இலங்கைக்கு அத்தியாவசியம் – ஜி.எஸ்.பி. பிளஸ் விடயத்திலும் சிக்கல் வராது – அமைச்சர் பீரிஸ் நம்பிக்கை தெரிவிப்பு!

Saturday, November 20th, 2021

எமது அயல் நாடானா இந்தியாவுடனான நல்லுறவென்பது இலங்கைக்கு அத்தியாவசியம் என வலியுறுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் அடித்தளமாகக்கூட இந்த விடயத்தைக் கருதலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்  –

அணிசேராக் கொள்கை தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமற்றது என்ற கருத்தை நல்லாட்சியின் வெளிவிவகார அமைச்சர் முன்வைத்திருந்தார். அந்த கருத்துடன் உடன்பட முடியாது. நாம் அனைத்து நட்பு நாடுகளுடனும் சிறந்த நட்புறவை பேணிவருகின்றோம்.

ஒரு நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் மற்றைய நாட்டுடன் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடும் கொள்கையென்பது எமது வெளிவிவகாரக் கொள்கைக்கு எதிரான விடயமாகும்.

எமது அயல்நாடான இந்தியாவுடனான நல்லுறவென்பது எமக்கு அத்தியாவசியம். இலங்கையின் வெளிவிவகார் கொள்கையின் அடித்தளமாகக்கூட இதனை கருதலாம். இரு நாடுகள், இரு அரசுகளுக்கு இடையில் மட்டுமல்ல இரு நாடுகளின் மக்களுக்கிடையிலும் சிறந்த நல்லுறவு உள்ளது.

இதேவேளை பௌத்த கலாச்சாரத்துடன் தொடர்புடைய குஷி நகர் விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு, திறந்துவைக்கப்பட்டது. எமது நாட்டில் இருந்து 100 பிக்குகள் சென்ற விமானமே முதலில் தரையிறங்கியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு வந்திருந்தார். ஸ்கொட்லாந்தில் பாரத பிரதமரை சந்தித்தபோது அதற்காக நான் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டேன். இந்தியாவின் பிராந்தியங்களுடனும் நாம் கொடுக்கல், வாங்கல்களிலும் ஈடுபட்டுவருகின்றோம்.

இதனிடையே சீனாவும் எமக்கு அதிக உதவிகளை வழங்கும் நாடு. இலங்கையின் ஏற்றுமதியில் பெரும்பங்கு மேற்குலகமே செல்கின்றது. ஆபிரிக்க நாடுகளுடனான உறவை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் நாம் முன்னெடுத்தபோது சிரித்தனர். புதிய நாடுகளுடனான தொடர்புகள் அவசியம். ஆக ஒரு வட்டாரத்துக்குள் மட்டும் இருக்காது, அனைத்து நட்பு நாடுகளுடன் நாம் சிறந்த நல்லுறவை பேணுவோம்.

அதேவேளை, ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டகுழு எமது நாட்டுக்கு வந்தது. என்னையும் சந்தித்து கலந்துரையாடினர்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்கான நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகவும் எனவே, ஜி.எஸ்.பி. பிளஸ் விடயத்தில் சிக்கல் வராது என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது;.

Related posts: