இடைக்கால கொடுப்பனவு நிலுவையை தருமாறு கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Wednesday, August 24th, 2016

 

தேயிலை சபை மற்றும் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் சென்.கூம்ஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவான 2500 ரூபாய் இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை என அத்தோட்ட தொழிலாளர்கள் தோட்டத்தை நிர்வகித்து வரும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாகனங்களையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இவ் ஆரப்பாட்டம் இன்று சென்.கூம்ஸ் தோட்ட காரியாலயத்திற்கு முன்பதாக இடம்பெற்றது. இதில் இத் தோட்டத்தை சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  சென்.கூம்ஸ் தோட்டம் தேயிலை சபை மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சின் கீழ் வழிநடத்தப்பட்டு வருகின்றது.

ஆகையினால் ஏனைய கம்பனி தோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால கொடுப்பனவு பட்டியலில் குறித்த சென்.கூம்ஸ் தோட்டம் உள்வாங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  இது தொடர்பில் தோட்ட அதிகாரி லக்ஸ்மன் ஜெயதிலக்கவிடம் வினவிய போது,

மக்களின் கோரிக்கைக்கு அமைவாக முதலில் 1000 ரூபாய் வழங்குவதாக தெரிவித்தோம். மிகுதி தொகையினை இரண்டு வாரங்களில் வழங்குவதாக கூறினோம். இதில் உடன்பாடு இல்லாத தொழிலாளர்கள் எமது காரியாலயத்தையும் வாகனங்களையும் முற்றுகையிட்டு ஆரப்பாட்டம் செய்தனர்.

இதன்போது மேலதிகாரியான தேயிலை ஆராய்ச்சி நிலைய ஆணையாளர் கலாநிதி. சரத் அபேசிங்கவுடம் கலந்தாலோசித்து இது தொடர்பில் தேயிலை சபை மற்றும் அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது.  இதன்பின்னர் இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாவை 25.08.2016 அன்று மாதாந்த முற்பணத்தோடு வழங்க முடிவுகள் செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு மாதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாகும். மேலும் 2500 ரூபாவை இரண்டு வாரங்களுக்கு பின் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் ஊடகவியலாளர்களிடமும் மக்களிடமும் தெரிவித்தார்.  இதை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். எனினும் பகல் வழமையான தொழிலுக்கு செல்வதாக தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது லிந்துலை பொலிஸார் ஸ்லத்திற்கு விரைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Related posts: