அறிவு சார்ந்த சமூகத்திலே வாழும் நாங்கள் எம்மையும் இயைபாக்கமுள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் – வடமாகாணக்  கல்வி  அமைச்சின் செயலாளர் ரவீந்திரன்!

Tuesday, March 22nd, 2016

நாங்கள் இன்று வாழ்கின்ற உலகம் விந்தையானது . நாளுக்கு நாள் தொழில்நுட்ப முன்னேற்றம் வளர்ச்சி கண்டு வருகிறது. உலகத்தில் நடந்து கொண்டிருக்கின்ற அத்தனை விடயங்களையும் ஒரு நொடிப் பொழுதில் தெரிந்து கொள்வதற்கான வசதி வாய்ப்புக்கள் உருவாகியுள்ளது.  தற்போது அறிவு சார்ந்ததொரு  சமூகத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான அறிவு சார்ந்த சமூகத்திலே வாழும் நாங்கள் ஒவ்வொருவரும் அதற்கேற்ப எங்களையும்  இயைபாக்க முள்ளவர்களாக மாற்றிக்கொள்ளவேண்டும்.  உலகத்தில் அன்றாடம்  நடக்கின்ற முக்கியமான  விடயங்களை உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அல்லாவிடில் நாங்கள் இந்தச் சமூகத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியாது. எங்களைச் சமூகத்திலிருந்து ஒதுக்கி விடுவார்கள் – என வடமாகாண கல்வி பண்பாடு இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ. ரவீந்திரன் தெரிவித்துள்ளார். .

வடபிராந்திய சத்தியசாயி நிறுவனங்களின் இணைப்புக் குழு நடாத்திய  அன்பு வார ஒன்று கூடல் நிகழ்வு நேற்று முன்தினம்(20) திருநெல்வேலி ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்-

அன்பிருந்தால் எங்களிடம் மகிழ்ச்சியிருக்கும், அன்பிருந்தால் நாங்கள் ஆரோக்கியமாக இருப்போம். அன்பிருந்தால் நாங்கள் நிச்சயம் உயர் நிலையை எட்ட முடியும்.மகிழ்ச்சி இருந்தால் தான் நாங்கள் எங்களுடைய வேலைகளைச் சிறப்பாகச் செயற்படுத்த முடியும். ஆரோக்கியம் நிறைந்திருக்கும் போது எங்கள் சுமைகள் அற்றுப் போகும். அன்பு என்பது எண்ணத்திலே சத்தியமாகவும், செயலிலே தர்மமாகவும், உணரும் போது சாந்தியாகவும், விளங்கிக் கொள்ளும் போது அகிம்சையாகவும் காணப்பட வேண்டுமென பகவான் சத்திய சாயி பாபா கூறுகிறார்.

உண்மையான அன்பு என்பது ஆயிரம் தடவை அவமானப்படுத்தினாலும் எல்லாவற்றையும் மறந்து மீண்டும் பேசத் துடிக்கும் அன்பே உண்மையான அன்பு ஆகும் என்பது  அறிஞர்கள் வாக்கு. அடுத்த நிமிடம் கூட நமக்கு நிச்சயமில்லை, இதில் வெறுப்பு, கோபம் ஆகிய அழுக்குகளைச் சுமந்து சாகாதே எனவும் கூறியுள்ளனர் .  எனவே, நாங்கள் அன்பின் ஆழத்தை நன்கு உணர வேண்டும். எத்தனை கோபங்கள், பிரச்சினைகள் ஏற்பட்டாலும் நாங்கள் அனைத்தையும் மறந்து மறுபடியும் பேச ஆரம்பிக்கிறோம் என்றால் அதுதான் உண்மையான அன்பாகும்.

எங்களுடைய புராணங்கள், இதிகாசங்களில் ஆணவத்தினூடாக ,கோபத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் தொடர்பில் கூறப்பட்டுள்ளது. இராவணன் எவ்வாறு தன்னுடைய ஆணவத்தால் அழிந்தான்? துரியோதனன் எவ்வாறு தன்னுடைய ஆணவத்தால் அழிந்தான் போன்ற விடயங்கள் தத்ரூபமாகச் சொல்லப்பட்டுள்ளன. ஆகவே எங்களிடம் குடிகொண்டுள்ள  ஆணவம், கோபம் ஆகிய தீய குணங்களை அறவே ஒழிக்க வேண்டும்.

எங்களிடம்  ஆணவ குணம் மேலோங்கும் போது அறிவு மங்கிப் போகிறது. அறிவு பெருகும் போது ஆணவ குணம் குறைந்து விடுகிறது.

நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்குப் பத்து வகையான விடயங்களைப் பின்பற்ற வேண்டும் . அந்த வகையில் சாந்தமாகப் பேச வேண்டும்.

உணவைச் சுவையாக உண்ண வேண்டும். சிறிதளவு உணவு உண்டாலும் ருசித்துச் சாப்பிட வேண்டும்.  போதுமானவளவு உறங்க வேண்டும். ஒருவர் ஆகக் குறைந்தது ஏழு மணித்தியாலங்களாயினும் தினமும் உறங்க வேண்டும். அல்லாவிடில் மகிழ்ச்சியுடன் எங்களின் அன்றாட வேலைகளை ஆற்ற முடியாது. பொறுமையாகப் பணி செய்ய வேண்டும். நாங்கள் வேலை செய்கின்ற இடங்களில் எவ்வாறான தடைகள்,சவால்களை எதிர்கொண்ட போதும் பொறுமையை இழக்கக் கூடாது. மாணவர்கள் கல்வி கற்கும் காலத்தில் பொறுமையாகவும், நிதானமாகவும் கற்பதன் உயர் பெறுபேறுகளைப் பெற முடியும். தொலைக் காட்சி, கைத் தொலைபேசிகளில் கவனம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நுனிப் புல் மேய்வது போலக் கற்காமல் ஆழமாகக் கற்க வேண்டும். மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உண்மையாகவிருப்பதும் அவசியம். மாணவ மாணவிகள் தகாத பல செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் . மாணவர்கள், இளையோர்  மத்தியில் அண்மைக் காலமாகத்  தற்கொலை எண்ணம் அதிகரிப்பதற்கும் உண்மையாக இல்லாமை ஒரு காரணமாகும்.

யாழ்ப்பாணம் இந்துமகளிர் கல்லூரியில் ஒரு மாணவி உண்மையாக நடந்து கொள்ளாத காரணத்தால் அண்மையில் என்ன நடந்தது? என்பது பலருக்கும் தெரியும். நாங்கள் எங்கு சென்றாலும், என்ன செயல்களைச் செய்தாலும் உண்மை நெறியிலிருந்து விலகக் கூடாது.

வாழ்க்கையின் யதார்த்தத்தை நாங்கள் உணர்ந்து  கொள்ள வேண்டும். சரியான திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும். சிக்கனமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதுடன் நாளாந்த வாழ்க்கை முறையைக் கொண்டு நடாத்துவதிலும் திட்டமிடல்கள் வேண்டும். நாங்கள் முறையான திட்டமிடல்கள் இல்லாமல் ஒரு வேலையைச் செய்ய ஆரம்பிக்கும் போது மன அழுத்தம் அதிகரிக்கும். இதன் காரணமாக நாங்கள் பல வித நோய்களுக்கும் ஆட்படுகின்றோம். இதனால் மகிழ்ச்சி அற்றுப் போகிறது. இந்த விடயத்தில் நாம் மிகவும் சிரத்தையுடன் செயற்பட வேண்டும். மாணவர்கள் கற்பதில் சரியான திட்டமிடல்களைக் கொண்டிருக்க வேண்டும்.

அடுத்ததாக நேர்மையாகவும் தொடர்ந்தும் சம்பாதிக்க வேண்டும். நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு தொகை பணமும் நேர்மையானதாக இருப்பதுடன் அவ்வாறு சம்பாதிக்கும் பணத்தைச் சேமித்தும் வைக்க வேண்டும். நான் கடந்த வாரம் விஸா அனுமதிக்காகக்  கொழும்பு செல்ல வேண்டியிருந்தது. அங்கே அவர்கள் ஒன்லைனில் விஸா விண்ணப்பம் செய்வதற்காக என்னிடம் எவ்வாறு பணத்தைக் கறக்கிறார்கள் என்பதை நான் அவதானித்தேன். இவ்வாறு நேர்மையற்ற வகையில் உழைக்கும் உழைப்பு நிச்சயம் நின்று நிலைக்காது.   நேர்மையற்ற வகையில் பணத்தை உழைப்பதை மாத்திரம் நாங்கள் குறியாகச் செயற்படுவதால் பலனேதுமில்லை.

மகிழ்ச்சியாக வாழ்வதற்கு  நாங்கள்  நாகரிகமாக வாழ  வேண்டியதும் அவசியம். எந்த வித  எதிர்ப்புமின்றி அன்பு செலுத்த வேண்டும். நாங்கள் அனைத்து உயிர்கள் மீதும்  அன்பு செலுத்த வேண்டும். அந்த அன்பு பேதங்களைக் கடந்த வகையிலும், எதிர்பார்ப்புக்கள் அற்றதாகவும் காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்

Related posts: