அரசியலில் பெண்கள் பங்கு இலங்கைக்கு 179ஆம் இடம்!

Wednesday, July 12th, 2017

அரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான சர்வதேச பட்டியலில் இலங்கை 179வது இடத்தில் உள்ளது. பெண்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் ஸ்தாபனத்தின் 2017ம் ஆண்டுக்கான அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வரையான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 190 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில், இலங்கை 179வது இடத்தில் உள்ளது. இலங்கையில் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 13 பெண் உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளனர். இது மொத்த சதவீதத்தில் 5.8 வீதமாக பதிவாகியுள்ளது. இதேவேளை, அமைச்சர்களாக பதவி வகிக்கும் பெண்கள் தொடர்பான பட்டியலில், இலங்கை 164வது இடத்தில் உள்ளது.

47 அமைச்சர்களைக் கொண்ட இலங்கையில், 2 பெண் அமைச்சர்கள் மட்டுமே உள்ளதாகவும், இது மொத்த சதவீதத்தில் 4.3 வீதம் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியலில் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது. நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான பட்டியலில், ருவண்டா முதலாம் இடத்தில் உள்ளது. அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள 80 பிரதிநிதிகளுள் 49 பிரதிநிதிகள் பெண்களாவர். மொத்த சதவீதத்தில் 61.3 என்ற வீதத்தை இது பதிவு செய்துள்ளது.

Related posts: