அதிபரை பதவி நீக்கும் நடவடிக்கைக்கு மாணவிகள் தொடர்ந்தும் எதிர்ப்பு!
Thursday, September 8th, 2016
உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபரை பதவி நீக்கும் நடவடிக்கைக்கு மாணவிகளும் பழைய மாணவிகளும் பெற்றொரும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
உடுவில் மகளிர் கல்லூரி மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படாத நிலையில், நேற்று மாணவிகள் சிலர் பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர். கல்லூரியின் தற்போதைய அதிபரை பதவியிலிருந்து நீக்குவதற்கு கல்லூரி நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிக்கு மாணவிகள் நேற்று முன்தினத்தில் இருந்து தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துவிட்டு மீண்டும் கல்லூரி வளாகத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த ஆசிரியர்கள் சிலருக்கு மாணவிகள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
குறித்த ஆசிரியர்கள் புதிய அதிபருக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் கல்லூரிக்குத் திரும்பியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் எதிர்ப்பை அடுத்து, ஆசிரியர்கள் வேறு வழியில் பாடசாலை வளாகத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்தபோது மீண்டும் மாணவிகள் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்நிலையில், வட மாகாண விசேட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் மற்றும் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் ஆகியோர் பாடசாலை நிர்வாகத்தை சந்தித்துக் கலந்துரையாடினர்.
ஊடகவியலாளர் ஒருவரையும் பாடசாலையிலிருந்து பாடசாலை நிர்வாகத்தினர் பலவந்தமாக வெளியேற்றியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஆயர் தியாகராஜா பாடசாலைக்குள் பிரவேசித்து நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியுள்ளதுடன் மாணவிகளின் எதிர்ப்பு வலுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
|
|
|


