அகதிகள் தப்பிச் சென்றால் உடன் அறிவிக்கவும்!

Sunday, August 14th, 2016

இலங்கை அகதிகள் படகுகள் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதாக தகவல் தெரிந்தால் உடனடியாக 1093 எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் தூத்துக்குடி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்புக் குழும பொலிஸார் படகில் சென்று சனிக்கிழமை விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.  கடலோர பாதுகாப்புக் குழும துணைக் கண்காணிப்பாளர் ஸ்டேன்லி ஜோன்ஸ் மேற்பார்வையில், ஆய்வாளர் முகேஷ்குமார் தலைமையில் விழிப்புணர்வு பிரசாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி தருவைக்குளம் கடலோர பாதுகாப்புக் குழும பொலிஸார் தங்களது ரோந்து படகுகளில் கடலுக்குள் சென்று, அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அப்போது, மீனவர்கள் கண்டிப்பாக லைப் ஜாக்கெட் அணிந்து செல்ல வேண்டும், அனைத்து படகுகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும், இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்கச் செல்லக்கூடாது, மீன்பிடிக்க போகும்போது கண்டிப்பாக அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தினர்.

மேலும், கடலுக்குள் சந்தேகப்படும்படியான வகையில் படகுகள் சென்றாலோ, அன்னிய நபர்களின் நடமாட்டங்கள் இருந்தாலோ, சந்தேகத்துக்குரிய பொருள்கள் மிதந்து வந்தாலோ உடனே கடலோர பாதுகாப்புக் குழுமத்தின் அவசர அழைப்பு எண்ணுக்கு (1093) தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தடை விதிக்கப்பட்ட உயிரினங்களை பிடிக்கக் கூடாது, மீறி வலையில் சிக்கும் உயிரினங்களை மீண்டும் கடலிலேயே விட்டுவிட வேண்டும், மீன்வளத் துறையின் எச்சரிக்கையை மீறி கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்றும் மீனவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

வெளிமாவட்டங்களிலிருந்து வாங்கி வரும் படகுகளை மீன்வளத் துறை அலுவலகத்தில் பதிவு செய்த பிறகே உபயோகப்படுத்த வேண்டும், அனைத்து படகுகளுக்கும் விபத்து காப்பீடு செய்ய வேண்டும், தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிக்கக் கூடாது, இலங்கை அகதிகள் படகுகள் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதாக தகவல் தெரிந்தால் உடனடியாக 1093 எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts: