20ஆவது திருத்தச் புதியதொரு அரசிலமைப்பு அல்ல : ஒரு திருத்தச் சட்டமே – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!
Thursday, October 22nd, 2020
இருபதாவது திருத்தச் சட்டம் என்பது புதியதொரு அரசிலமைப்பு அல்ல. இது ஒரு திருத்தச்சட்டம் மாத்திரமே என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்’து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
19 வது திருத்தச் சட்டமானது, நீதிமன்றத்தினால் விதிந்துரைக்கப்பட்டிருந்த வியாக்கியானங்களையும் பொருட்படுத்தாமல், இரவோடிரவாக நிறைவேற்றப்பட்டு, கடந்த நான்கரை வருட காலத்தில் இந்த நாட்டையே சின்னாபின்னமாக்கி இருந்தமையை எமது மக்கள் நேரிடையாகவே அனுபவித்து வந்திருந்தனர்.
அந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் காரணமாக உயிரிழந்த மக்களுக்கும், அங்கவீனமுற்றுள்ள மக்களுக்கும், அழிந்த சொத்துக்களுக்கும், வீழ்ச்சி கண்ட பல்துறை பொருளாதாரத்திற்கும், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டிய அரசியல் தலைவர்களும், அரச உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியங்களைக் கூறிவருகின்றனர். இந்த சாட்சியங்கள் ஊடகங்களின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன.
இந்த சாட்சியங்களில் கூறப்படுகின்ற விடயங்களை அவதானிக்கின்றபோது, 19வது திருத்தத்தின் பின்னரான கடந்த ஆட்சிக் காலமானது, அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் இழுபறி ஏற்பட்டிருந்த நிலையில், மக்களது பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டு, ஆளுக்காள் தத்தமது சுயலாபங்கள் சார்ந்து செயற்பட்டிருக்கின்றார்கள் என்பது எமது மக்களுக்கு புலனாகின்றதுடன், 19வது திருத்தச் சட்டத்தின் நிர்வாணம் தெட்டத் தெளிவாகின்றது.
அதுமட்டுமல்ல, இந்த நாடு கடந்த கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட கால யுத்தம் காரணமாக பின்னடைவினை நோக்கிச் சென்றிருந்ததைப் போன்றே, 19வது திருத்தச் சட்டத்திற்கு பிற்பட்ட கடந்த கால ஆட்சியிலும் இந்த நாடு பல வருடங்கள் பின்னோக்கியதாக சென்றுவிட்டிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


