13ஆவது திருத்தச் சட்டம் தீர்வல்ல! ஒரு யதார்த்தமான ஆரம்பம்!! – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, September 27th, 2016

அதிகாரப் பகிர்வுடனானஅரசியல் தீர்வின் அடைப்படையாக 13ஆவது திருத்தச் சட்டமே இருக்கும் என்று அன்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து புதிய நிர்வாகக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகி நாம் ஆரம்பத்திலிருந்து, 1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுக்கான இலக்கு நோக்கி தமிழ் மக்கள் முன்னேற வேண்டும் என்று கூறி வந்திருக்கின்றோம் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவரது முகநூல் பதிவில் –

13ஆவது திருத்தச் சட்டத்தை அன்று ஏற்றுக்கொண்டு இறுதி இலக்கு நோக்கி கட்டம் கட்டமாக முன்னோக்கி நகர்ந்திருந்தால், வடக்கு கிழக்கு மாகாணசபைகள் ஒரே மாகாணமாக தொடர்ந்தும் இணைந்தே இருந்திருக்கும்.

நிரந்தர அரசியல் தீர்வுக்கான சூழலையும் நாமே ஏற்படுத்தியிருக்கலாம். அத்துடன் இந்திய அரசின் பின்பலம் வடக்கு கிழக்கு மாகாணசபையின் அபிவிருத்தியிலும்,பொருளாதார மீள் எழுச்சியிலும், மீள் கட்டுமானத்திலும் உச்சபட்சமாக கிடைத்திருக்கும்.

குறிப்பாக மாகாணசபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஒரு பிரச்சினையாக இருந்திருக்காது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக வாகரை அவலமும், முள்ளிவாய்க்கால் மனிதப் பேரழிவும் நடந்திருக்காது. பல ஆயிரம் இளைஞர், யுவதிகளும், அப்பாவி பொதுமக்களும் பலியாகியிருக்கமாட்டார்கள்.

எமது தாயக வாழ்விடங்கள் சிதைந்து சின்னாபின்னமாகி இருக்காது. தமிழ் தலைவர்களையும், பெரும் கல்விமான்களையும், தமிழ் இனம் இழந்திருக்காது.

எமது புத்திஜீவிகளும், ஆற்றல் நிறைந்தவர்களும் தாயக மண்ணைவிட்டு புலம் பெயர்ந்து போயிருக்கமாட்டார்கள்.

மாகாணசபையை பொறுப்பேற்றிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தினர் அதைச்சரியாக நிர்வகிக்காமல், துஷ;பிரயோகம் செய்துவிட்டார்கள்.

புலிகளோ மாகாணசபையை நிராகரித்து ஆயுதப் போராட்டத்தின் ஊடாக பெறப்படும் தமிழீழமே தீர்வாக அமையும் என்று கூறியதுடன் மாகாணசபை முறைமை மீது நம்பிக்கை இல்லாமல் தொடர்ந்து ஆயுத வன்முறையில் ஈடுபட்டார்கள்.

13ஆவது திருத்தச்சட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு தீர்வு நோக்கி முன்னேறலாம் என்று ஈ.பி.டி.பி அன்று யதார்த்தத்தைக் கூறியபோது, அது அறை குறைத் தீர்வு என்றும், அதைத் தும்புத் தடியாலும் தொட்டுப்பார்க்கவும் மாட்டோம் என்றும் புலிகளால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறினார்கள்.

புலிகளும் மாகாணசபை முறைமையை நிராகரித்தார்கள்.

13ஆவது திருத்தச் சட்டம் இந்திய, இலங்கை அரசுகளின் விருப்பத்துடன், தமிழ் மக்களுக்கு சன்மானமாக அதிகாரங்களை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டதல்ல.

விடுதலை உணர்வோடு பல தமிழ் இயக்கங்களில் இணைந்து தம்மை அப்பணித்த இளைஞர், யுவதிகளின் தியாகங்களினாலும், தமிழ் மக்களின் அர்ப்பணிப்புக்களாலும் பெறப்பட்ட தீர்வுக்கான ஆரம்பமாகும்.

ஆயுத வன்முறையானது புலிகளையும் அழித்து, தமிழ் மக்களையும் அழிக்கப் போகின்றது என்று நாம் கூறினோம்,

13ஆவது திருத்தச் சட்டத்தை ஆரம்பமாகக் கொண்டே கட்டம் கட்டமாக இறுதி தீர்வை அடைந்து கொள்ளமுடியும் என்றும் நாம் கூறினோம், சர்வதேச மற்றும் பிராந்திய அரசியல் மாற்றங்களை நாம் புரிந்துகொண்டு,

தேவையான மாற்றங்களை செய்துகொண்டு அரசியல் உரிமைக்கான போராட்டவடிவத்தை மாற்றியமைத்து நடைமுறைச்சாத்தியமான அணுகு முறையை பின்பற்ற வேண்டும் இல்லாவிட்டால் அந்த அந்நியச் சுழியானது போராட்டத்தை சுழற்றித் தூக்கிவீசிவிடும் என்றும் கூறினோம்.

இவ்வாறு யதார்த்தமான கருத்தையும், சரியான திசையையும் தமிழ் மக்களுக்கு ஈ.பி.டி.பியாகிய நாம் காட்டி நின்றபோது எம்மை துரோகி என்றும், அரசின் துணைக் குழு என்றும்,

ஆயுதக் குழு என்றும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கும் ஒட்டுண்ணிக் குழுக்கள் அக்கால கட்டத்தில் எம்மை தூற்றினார்கள்.

ஆனால் நாங்கள் நிதர்சனமான கருத்தையே மக்களுக்க கூறியிருக்கின்றோம் என்பதும், சரியான திசைக்கே வழி காட்டியிருக்கின்றோம் என்பதையும் காலம் இன்று நிரூபித்திருக்கின்றது.

மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், பாரிய நெறுக்கடிகளுக்கு மத்தியிலும் பாதுகாத்து முன்னெடுத்து வந்த13ஆவது திருத்தச் சட்டத்தையே அடிப்படையாகக் கொண்டு அதிகாரப் பகிர்வுடனான அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டுக்கு இன்று அரசாங்கம் வந்து நிற்கின்றது.

புதிய அரசை ஆட்சி பீடம் ஏற்றியதாகக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், தமிழரசுக் கட்சியினரும் பிரதமர் கூறிய அடிப்படையிலேயே தீர்வொன்றை ஏற்றுக்கொள்ளும் இணக்கத்தின் அடிப்படையிலேயே அரசுடன் இணக்கமாக செயற்பட்டு வருவதுபோல் தெரிகின்றது.

ஈ.பி.டி.பி மீது சேறு வாரிப் பூசியவர்களும், அடிப்படையற்ற அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர்களும்,

இன்று ஈ.பி.டி.பியின் அரசியல் வழிமுறையில் வந்து நிற்பதையும்,ஈ.பி.டி.பி கூறி வந்ததீர்வுக்கான அடிப்படையை ஏற்றுக் கொண்டிருப்பதையும் ஈ.பி.டி.பி ஆச்சரியமாகப் பார்க்கவில்லை.

ஏன் என்றால் முடக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் அரசியல் தளத்தை மீண்டும் துளிர்க்கச் செய்து ஜனநாயகப் பூக்களை மலரச் செய்ததும்,

பல கருத்துக்களும், பல கட்சி செயற்பாடுகளும் ஒரு இனக் குழுமத்திடம் இருப்பது அவசியம் என்றும் ஆரம்பத்திலிருந்து கூறிவந்த ஈ.பி.டி.பியினராகிய நாமே இழப்புக்களையும்,

அவதூறுகளையும் சுமந்துகொண்டும் முன்னோக்கிய வேலைத் திட்டங்களுடன் மக்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதே எமது வரலாறாகும். ஈ.பி.டி.பியின் கொள்கை வழி சரியானது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

IMG_3069-300x271

Related posts:


இறுதித் தீர்வுக்கான சிறந்த ஆரம்பம் 13ஆவது திருச்சட்டமே - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு...
ஈ.பி.டி.பி. கூறுகின்ற அரசியல் நிலைப்பாட்டையே ஏனைய கட்சிகளும் பின் தொடர்கின்றன - அமைச்சர் டக்ளஸ் தே...
மக்களின் பலமானஆணை கிடைத்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் - செய்வதைத்தான் சொல்வேன் – அமைச்சர் டக...