மதவாத ரீதியில் மக்களை வழிநடத்த யாரேனும் முயற்சித்தால் நாடு அழிவுகளை சந்திக்க நேரிடும் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 4th, 2019

இன்று இந்த நாட்டிலே அரசியல் ரீதியிலாக சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களை இந்த அரசாங்கம் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்வர வேண்டும். அவ்வாறின்றி, தொடர்ந்தும் இனவாத ரீதியிலானதும், மத அடிப்படைவாத ரீதியிலானதுமான பாதையில் அரசியலை முன்னெடுத்து, மக்களை வழிநடத்திக் கொண்டு செல்வதற்கு யாரேனும் முயற்சிப்பீர்களேயானால், அது இந்த நாட்டுக்கு மேலும், மேலும் அழிவுகளையே கொண்டு தரும் என்பதில் மறு பேச்சுக்கு இடமில்லை என்பதையே நான் இங்கு மீண்டும், மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இலங்கை தேயிலை ஆராய்ச்சி சபை தொடர்பிலான திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதத்;தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மாற்றங்கள் ஏற்படுகின்ற நிலையில், அந்த மாற்றங்கள் எதன் அடிப்படையில் நிகழ்த்தப்படுகின்றதோ அந்த அடிப்படைகளின் முக்கியத்துவமாக இருக்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

அதைவிடுத்து, குறுகிய, சுயலாப அரசியலுக்காக ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றை நியாயப்படுத்தியும், இன்னொரு சந்தர்ப்பத்தில் அதையே குற்றஞ்சாட்டியும் சில தமிழ் அரசியல் வியாபாரிகள் போன்று செயற்படுவதால், இந்த நாட்டில் எதையுமே உங்களிடமிருந்து எமது மக்களால் எதிர்பார்க்க முடியாது என்பதையும் அவதானத்தில் கொள்ள வேண்டும்.

இன்று சகோதர முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டாக தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து, சுதந்திரமான விசாரணைகளுக்கென ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். இரண்டு ஆளுநர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதில் இருந்து தொடர்ந்தும் இவர்களில் ஒரு சிலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள், பல்வேறு தரப்பினரால் சுமத்தப்பட்டு வந்திருந்தது.

இப்போது, அத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு காலக்கெடு விடுத்து, முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். எனவே, இந்த அரசு உடனடியாக அதை செய்து முடிக்க வேண்டும். அத்துடன், இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். பிச்சைக்காரனின் புண்ணைப் போல் தொடர்ந்தும் இந்தப் பிரச்சினையை வைத்துக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சினை காரணமாக இன்று இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பற்றதொரு அச்ச நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த மக்களின் இத்தகைய நிலை விரைவில் மாற்றப்பட வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்திக் கொண்டு, இன்றைய விடயத்திற்கு வருகின்றேன்.

Related posts: