பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாதவர்கள் விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, May 8th, 2019

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தௌஹீத் கொள்கை அடிப்படையில் இயங்கும் பல அமைப்புக்கள் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடாமலும் அல்லது தூண்டாமலும் வெறுமனே சமய சார்பானதாகவும் சமூகநலன் நடவடிக்கைகளிலும் ஜனநாயக வழிமுறைகளில் செயற்பட்டு வருகின்றன. தௌஹீத் கொள்கையில் அடிப்படையில் நமது மத அனுஸ்டானங்களையும் சமூகக் கடமைகளையும் கடைப்பிடித்து வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த நாட்டில் இருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்ல. அல்லது ஆயுதக் கலாசாரத்தை முஸ்லிம்கள் மத்தியில் பரப்புபவர்கள் அல்ல. எனவே உண்மையான தௌஹீத் வாதியையும் இஸ்லாமிய பயங்கரவாதியையும் வேறுபடுத்தி அடையாளங்கண்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் நான் இந்த சபையில் பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெறுகின்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

முஸ்லிம் மக்களில் ஒரு குறிப்பிட்ட சிறு தரப்பினரே இத்தகைய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என இனங்காணுகின்ற நீங்கள், ஏனைய முஸ்லிம் மக்களையும் அந்த பயங்கரவாதத்தின்பால் தள்ளிவிடாமல், உங்களது அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையே இங்கு நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

தற்போது நோன்பு  ஆரம்பத்திருக்கின்ற நிலையில், முஸ்லிம் மக்களது மத உணர்வுகளையும் மதித்து, செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் பொலிசாரால் பல முஸ்லிம் இளைஞர்களும் கல்விமான்களும் மதகுருமாரும் கைதி செய்யப்பட்டு தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் நீதிமன்ற தடுப்புக் காவலிலும், பாதுகாப்புச் செயலாளரின் தடுத்தல் கட்டளையின்கீழும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் எந்தக் குற்றமும் இளைத்தவர்கள் அல்ல என்றும் அவர்களிடமிருந்து ஆயுதங்களோ வெடிபொருட்களோ கைப்பற்றப்பட்டிருக்கவில்லையென்றும் சில இடங்களில் ஊனுகளை வைத்திருந்தவர்களையும் வீதியோரங்களில் அல்லது கடைகளில் விற்பனை செய்யப்படும் வாக்கிடோக்கிகளை வைத்திருந்ததாகவும் சில இஸ்லாமிய சஞ்சிகைகளை அல்லது புத்தகங்களை வைத்திருந்ததாகவும் தற்பொழுது இவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கையாளப்படுவதாகவும் எனக்கு முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன.

இவ்வாறான எந்தக் குற்றமும் செய்யாத அல்லது சட்டத்தால் தடை செய்யப்படாத பொருட்களை வைத்திருந்தவர்களாக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள சகல முஸ்லிம்கள் சார்பாகவும் பாதுகாப்பு அமைச்சும் அதன் உயர் அதிகாரிகளும் உடனடியாகக் கவனம் செலுத்தி இத்தகைய அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்வதை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் இச்சபையில் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.  

ஏற்கனவே 1971 மற்றும் 88, 89 களில் தென்பகுதியில் ஏற்பட்டிருந்த பயங்கரவாதத்தை அடக்கப் போய், 89களின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டிருந்த பயங்கரவாதத்தை அடக்கப் போய், சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளை நாம் மறந்துவிடக்கூடாது. அதே நிலை இந்த நாட்டில் இன்னுமொரு சமூகத்திற்கு வந்துவிடக் கூடாது. வன்முறைகள் இந்த நாட்டில் இனியும் தலையெடுக்காமல், அதனை அழிக்க வேண்டும். அதே நேரம், அப்பாவி பொது மக்கள் அதன் காரணமாகப் பலியாகிவிடக் கூடாது என்பதையே நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

அதேபோன்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் சில முஸ்லிம் தலைமைகள் தமிழ் மக்களை அடக்கியும், ஒடுக்கியும், புறந்தள்ளியும் வந்துள்ள நிலைமைகளும் இல்லாமல் இல்லை. இனியாவது, இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமல், தமிழ் மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற போக்குகளை அனைத்து முஸ்லிம் தலைமைகளும் கடைப்பிடிக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்கின்றேன்.

அத்துடன், கடந்த கால வடக்கு, கிழக்கின் தமிழ் தலைமைகளைப் போல், தங்களது சுயலாப அரசியலுக்காக இளைஞர்களை இனவாத வன்முறையின்பால் தூண்டிவிட்டு, பாரிய அழிவுகளுக்குள் அந்த இளைஞர்களையும், சமுதாயத்தையும் தள்ளிவிடாமல், முஸ்லிம் தலைமைகள் ஒட்டு மொத்த முஸ்லிம் மக்கள் சமுதாயத்திற்குமான நேர்வழியைக் காட்டுவதற்கு  செயற்பட முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுப்பதுடன், இந்த நாட்டின் அனைத்து மக்களும் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு முன்னின்று உழைக்க வேண்டும் என்ற விடயத்தையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

Related posts:


உணவு பதனிடும் நிலையங்கள் அமைக்கப்படும் எனக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு என்ன நடந்தது? – எம்.பி டக்ள...
20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை - கனேடிய உயர் ஸ்தானிகருக்கு எடு்துரைத்த...
நான் பொம்மையாக இருந்தல்ல - நெருப்பாறு கடந்தே அரசியலுக்கு வந்துள்ளேன் - நல்லூரில் அமைச்சர் டக்ளஸ் தேவ...