வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை: நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு  டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்து! 

Wednesday, November 30th, 2016

வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள் இலங்கையில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்பதை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக அத் திணைக்களம் அறிவித்துள்ளதாகத் தெரிய வந்துள்ள நிலையில், தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், இதற்கென சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்படும் நிலையில் அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு நாடாளுமன்றத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

2017ஆம் ஆண்டக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலங்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இன்று எமது நாட்டிலிருந்து, எமது நாட்டின் பல்வேறு துறைகள் சார்ந்த வளர்ச்சிகளிலும் பங்களிக்க வேண்டிய எமது  மக்களில் இலட்சக் கணக்கானோர், கடந்த கால யுத்தம், இன ரீதியிலான மோதல்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் காரணமாக இன்று புலம் பெயர்ந்து வெளிநாடுகளிலேயே வாழ்ந்து வருகின்ற நிலையில்,

புலம் பெயர்ந்த எமது மக்களுடனான உறவுகளை நம்பிக்கையுடன் வலுவாகக் கட்டியெழுப்பி, அதனூடாக எமது மக்களுக்கும், எமது நாட்டுக்கும் பல்வேறு பயன்மிக்க விடயங்களை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

மேற்படி புலம்பெயர் எமது உறவுகள் தொடர்பில் நான் தொடர்ந்தும் பல கோரிக்கைகளை இங்கு முன்வைத்து வந்திருக்கிறேன். அந்த வகையில், இரட்டைக் குடியுரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது.

இது, இன்று ஓரளவுக்குச் சாத்தியமாக்கப்பட்டு வருகின்றது என எண்ணுகிறேன். அது தொடர்பில் கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அடுத்தது, நமது நாட்டிலிருந்து புலம் பெயரும் நிலையில், எமது நாட்டில் வாக்களிக்கும் உரிமைக்குரிய வயதினைக் கொண்டிருந்தோருக்கு, அந்தந்த நாடுகளிலிருந்தே எமது நாட்டில் நடைபெறுகின்ற ஜனாதிபதி மற்றும் பொதுத்  தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விடயமாகும்.

குறிப்பாக, எமது நாட்டைச் சேர்ந்த மூவின மக்கள், மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளிலும் பரந்தளவில் வாழ்ந்து வருகின்ற நிலையில், அவர்களுக்கு வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தற்போது நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் எற்பட்டுள்ள காலத்தில் இந்த ஏற்பாட்டை வெகு இலகுவாக மேற்கொள்ள முடியும் என்றே நான் கருதுகின்றேன்.

இந்த நிலையில், வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள் இலங்கையில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்பதை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக அத் திணைக்களம் அறிவித்துள்ளதாகத் தெரிய வந்துள்ள நிலையில்,தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், இதற்கென சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்படும் நிலையில்,

இதனை வகுப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான தீர்மானங்களை விரைவாக எடுப்பதன் மூலமாக இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியுமென நான் எண்ணுகின்றேன்.

02

Related posts: