வல்வெட்டித்துறை வான்தோண்டும் நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Wednesday, June 19th, 2024
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பொலிகண்டி பகுதியில் வான்தோண்டுதல் நடவடிக்கைகள் அடுத்த மாதமளவில் முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்றில் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதியில் இறங்குதுறை அமைப்பது தொடர்பான கோரிக்கை இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளும்ன்றில் இன்று இடம்பெற்ற அமர்வின்போது கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிகண்டியில் இறங்குதுறை ஒன்றினை அமைக்க வேண்டும் எனவும் இழுவைப் படகுகளை தடை செய்ய வேண்டும் எனவும் கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன் இழுவைப்படகு விடயம் தொடர்பில் கடல்தொழில் மேற்பார்வை குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை அதற்கான தீர்வு எடுக்கப்படவில்லை. இழுவைப் படகினை பயன்படுத்தி மீன்பிடியை நாடு முழுவதும் தடை செய்துள்ள நிலையில் இதனை அமுல் படுத்த நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா? என கேட்டிருந்தார்.
இதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிலளிக்கையில் –
குறித்த பகுதியில் வான்தோண்டுதல் தொடர்பாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கேட்டிருக்கிறார்கள். இம்முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்துக்கென 500 மில்லியனை விசேடமாக ஒதுக்கியிருக்கின்றார். அதனடிப்படையில் வான்தோண்டுதல் நடவடிக்கைகள் அடுத்தமாதமளவில் முன்னெடுக்கப்படும்.
மேலும் 2018 ஆம் ஆண்டு இழுவைப்படகு தனிநபர் தனியார் சட்டமூலம் ஒரு தனி நபர் பிரேரணையாக கொண்டுவரப்பட்டு அதன்பின்னர் கடல் தொழில் அமைச்சு அதன் பொறுப்பை எடுத்துக்கொண்டது.
அப்பொழுது அந்த கடல் தொழிலாளர்கள் எதிர்ப்பு அல்லது அவர்களது ஆர்ப்பாட்டங்கள் அல்லது அவர்களது கோரிக்கைகளை முன்வைத்ததை அடுத்து ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் நாரா நிறுவனத்தின் ஆய்வுகளுக்கு பிறகு அது எந்தெந்த பகுதிகளில் செய்யலாம் என்று சொல்லி மித இழுவைப்படகுக்கு தான் அனுமதிக்கப்பட்டுள்ளதே தவிர எல்லா இடத்திலும் அல்ல. இருந்தும் உங்களது கேள்விகளை கருத்தில் எடுத்து மீளாய்வு செய்கிறேன். எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


