வன்முறை எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்- ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Thursday, September 8th, 2016
மலேசியாவில் இலங்கைத் தூதுவர் இப்ராஹிம் அன்சார் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் கவலையளிக்கும் அதேவேளை கண்டனத்திற்கும் உரியதாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பதிவில் குறித்த விடயத்தை பதிவுசெய்துள்ள டக்ளஸ் தேவானந்தா மேலும் பதிவிட்டள்ளதாவது –
வெளிநாடுகளில் ஈழத் தமிழர்களின் பெயரால் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்களால் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நன்மை ஏதும் ஏற்படப்போவதில்லை.இதுபோன்ற சம்பவங்கள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும், நல்லுறவையுமே பாதிக்கச் செய்வதுமட்டுமல்லாது, சர்வதேச ரீதியில் தமிழ் மக்களுக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறையானது யதார்த்தபூர்வமானதாகவும்,நடைமுறைச்சாத்தியமானதாகவும் இருக்க வேண்டுமே தவிர, இன்றைய சூழலில் வன்முறையைக் கையில் எடுப்பது உதவாது என்பதோடு, அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.
மலேசியாவில் நடைபெற்ற தூதுவர் மீதான தாக்குதலானது மனித சமூகம் வெறுக்கக் கூடிய செயலாகும். ‘நாம் தமிழர் அமைப்பை’ச் சார்ந்தவர்களே எமது தூதுவரைத் தாக்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும், நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தவுமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் ‘நாம் தமிழர் அமைப்பை’ப்போன்றவர்களே நாட்டுக்கு வெளியே இவ்வாறான குழப்பங்களை தோற்றுவிக்கும் தீய நோக்கத்துடன் இதுபோன்று வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.
இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற வெறுக்கத்தக்க சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
நீண்டகால யுத்தத்திற்குப் பின்னர் உருவாகியுள்ள அமைதியை பாதுகாக்கவும், அதனை வளர்த்தெடுக்கவும் இலங்கையர்களாகிய நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டும்.

Related posts:
|
|
|


