மதச் சின்னங்களை மக்கள் மீது திணிக்காதீர்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, March 16th, 2019

பௌத்த மக்கள் இல்லாத இடங்களில், ஏனைய மதங்களைச் சாரந்த மக்கள் வாழுகின்ற பகுதிகளில் பலவந்தமாக பௌத்த விகாரைகள் அமைக்கின்ற, சிலைகளை வைக்கின்ற சிலரது முயற்சிகளாலும், இனங்களுக்கிடையில் இத்தகைய முரண்பாட்டு நிலைமைகள் தோன்றிவருவதையும் நாம் அவதானித்து வருகின்றோம்.

எமது மக்கள் பௌத்த விகாரைகளுக்கு எதிரானவர்கள் அல்லர். பௌத்த விகாரைகளையோ, சிலைகளையோ ஓர் இனத்தின் மீதான இன்னொரு இனத்தின் ஆக்கிரமிப்புச் சின்னங்களாகப் பயன்படுத்தாதீர்கள் என்றே எமது மக்கள் கோருகின்றனர். மத ரீதியில் புனிதமானவற்றைக் கொண்டு ஏனைய மதத்தவர்களைப் புண்படுத்தாதீர்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதத்தின், புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு – வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என்பன தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே சிங்கள பௌத்த இராணுவத்தினர், பொலிஸார் இருக்கின்றனர். அவர்களது வழிபாடுகளுக்கு பௌத்த விகாரைகள் தேவை. அவர்கள் தாங்கள் தரித்துள்ள இடங்களில் அமைத்துக் கொள்கிறார்கள். அதனை எமது மக்கள் யாரும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் இருக்கின்ற காணி, நிலங்கள் எமது மக்களது எனில், அந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டதன் பின்னர், ஏற்படக்கூடிய நிலைமைகளும் அவதானத்தில் கொள்ளப்பட்டே இத்தகைய ஏற்பாடுகளை மேற்கொள்வதே சிறந்ததாகும்.

வடக்கிலே தேசிய கீதம் தமிழிலும், சிங்களத்திலும் ஒலிப்பது மட்டுமே நல்லிணக்கம் அல்ல. இந்த நாடு முழுக்க அது நிகழக்கூடிய வகையில் தமிழ் மக்களும், சிங்கள் மக்களும், முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அதற்கான வழிவகைகளை முதலில் ஏற்படுத்துங்கள்.

இந்த நாட்டில் பௌத்த மக்கள் வாழாத பகுதிகளில் பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு முயலுகின்ற சக்திகள், இந்த நாட்டில் பௌத்த மக்கள் வாழுகின்ற பகுதிகளில் செயற்பட்டு வருகின்ற பௌத்த விகாரைகளின் குறைபாடுகள், அபிவிருத்தி பற்றிக் கவலையடைவதில்லை.

2012ம் ஆண்டின் கணக்கெடுப்பின் பிரகாரம் இந்த நாட்டிலே 10,920 வெஹெர, விகாரைகள் இருந்துள்ளன என்றும், அதுகாலவரையில் சுமார் 400க்கும் மேற்பட்ட வெஹெர, விகாரைகள் மூடப்பட்டுள்ளன என்றும் தெரிய வருகின்றது.

கடந்த ஆண்டில் பல விகாரைகள் – புராதன விகாரைகள் அழிவடையக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாக ஊடகங்களில் கண்டிருக்கின்றோம். பதுளை, சிறிமல் கொட ஸ்ரீ விஜயராமஸ்தான விகாரையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக,மாவனல்லை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பலத்கமுவ புராண தபா கல்லென – கற்குகை விகாரை காடு மண்டி, அங்குள்ள பெறுமதிமிக்க வரலாற்று ரீதியில் புகழ்மிக்க ஓவியங்கள் அனைத்தும் அழிவுற்று வருவதாக,

பெலிஅத்த, வில்அத்தர வரலாற்றுப் புகழ்பெற்ற புராண விகாரையின் சிலை மற்றும் சுவர் ஓவியங்கள் அழிவடையக் கூடிய நிலையில் இருப்பதாக, கன்தேமெதகம, நிக்க சலானுவர வரலாற்றுப் புகழ்மிக்க மகாகிரி சேத்தியாராம ரஜமகா விகாரை காடு மண்டிக் கிடப்பதாக, குருனாகலை மாவட்டத்திலே வரலாற்றுப் பெறுமதிமிக்க கல்கமுவ அருகில் அமைந்துள்ள ரெஸ்வெஹெர புராண விகாரையில் இருக்கின்ற கண்டி யுகத்துடன் தொடர்புடைய மிகப் பெறுமதியான ஓவியங்கள் மற்றும் கௌதம புத்தர் சிலை மங்கி வருவதாக,

வலகம்பா மன்னர் நிர்மாணித்துள்ள ஊவ பரணகம உலுகல ரஜமகா விகாரை நாளுக்கு நாள் அழிவடைந்து வருவதாக,இப்படி எத்தனையோ வரலாற்று ரீதியிலான பௌத்த விகாரைகள் சிங்கள பௌத்த மக்கள் வாழுகின்ற பகுதிகளில் கேட்பாரற்ற நிலையில் காணப்படுவதாக எத்தனையோ செய்திகள் நாளுக்கு நாள் வருகின்றன.

மேலும், பௌத்த விகாரைகள் சம்பிரதாயத்தில் மிகச் சிறப்புவாய்ந்த நிர்மாணமான ரெம்பிட்ட – அதாவது கோபுரங்கள் மீது அமைக்கப்பட்ட 204 விகாரைகள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக 2017ஆம் ஆண்டு தெரிய வந்திருந்தது. அவற்றைப் பாதுகாத்து, பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

எனவே, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை மீள தோற்றுவிக்காத வகையில், அனைத்து மதங்களின் நடவடிக்கைகளும் மேற்கொள்ளத்தக்க வகையில் பாதுகாத்துக் கொள்வது இந்த நாட்டில் மதங்களுக்குப் பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர்களினதும் பொறுப்பாகும் என்பதையும் வலியுறுத்தி, தேசிய நல்லிணக்கச் செயற்பாட்டில் புத்தசாசன அமைச்சினதும், கலாசார அமைச்சினதும் பணிகள் மிக அத்தியவசியமாகும் என்பதையம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Related posts:

நிரந்தர பொருளாதாரத்தை ஈட்டும் வழிவகைகளை செய்து தாருங்கள் – டக்ளஸ் எம்.பியிடம் பூநகரி மக்கள் கோரிக்கை...
சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்...
ஊடகங்கள் மீதான அராஜகங்கள் அனைத்துக்குமான பழி ஈ.பி.டி.பி. மீது சுமத்தப்பட்டது. - மூத்த ஊடகவியலாளர் ஒப...

மக்களின் தேவைகளை தீர்ப்பதற்கு முன்னின்று உழையுங்கள் - நிர்வாக செயலாளர்களிடம் செயலாளர் நாயகம் தெரிவிப...
மக்களின் விருப்பத்தை சிதைக்க எந்தவொரு சக்தி முனைந்தாலும் அனுமதிக்க மாட்டேன்: செம்பியன்பற்று மக்களுக்...
கல்முனை கடற் பரப்பில் எண்ணெய்க் கசிவு? - உடனடியாக ஆய்வு செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்.